ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை புனரமைக்க ரூ.425 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது புதுக்கோட்டை எம்எல்ஏ (திமுக) வை.முத்துராஜா, உசிலம்பட்டி எம்எல்ஏ பி.ஐயப்பன் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:
புதுக்கோட்டை மாநகராட்சி கீழ் மூன்றாம் வீதி நகர மையப்பகுதியில் அருள்பாலித்து வரும் வரதராஜ பெருமாள் கோயில் திருப்பணிகள் ரூ.1 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு உறுப்பினர் கோரிய அந்த தெப்பக்குளமானது மாசி மகத்திற்கு மாத்திரம் இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக் கொள்கிறது. மற்ற நேரங்களில் அந்த குளத்தை பொறுத்தளவில் மாநகராட்சி தான் பராமரிக்கிறது. குளத்திற்கு தண்ணீர் வருகிற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் நிறைந்திருக்கின்றன.
எனவே, மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் ஒருங்கிணைந்து வரும் தீபாவளிக்கு பிறகு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி நிரந்தர தீர்வு காணப்படும்.உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், விக்ரமங்கலம், வி.கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மருதப்ப கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயிலாகும். அந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கோயில்களை புனரமைத்து பாதுகாத்திட ரூ.425 கோடி அரசு நிதி பெற்று, திருப்பணிகளுக்கு எடுத்துக் கொண்ட காரணத்தினால் தான் அந்த கோயிலில் திருப்பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.