Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் பயிற்சி பெற்றமைக்கான தகுதிச் சான்றுகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 13 உதவி இயக்குநர்கள் அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் பயிற்சி பெற்றமைக்கான தகுதிச் சான்றுகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாகவும் செம்மையாகவும் செயற்படுத்திடும் வகையில் 1958-ஆம் ஆண்டு ஆட்சிமொழிக் குழு உருவாக்கப்பட்டு. ஓர் ஆய்வுத் தனி அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் 1972 இல் இப்பணியிடத்துடன் சேர்த்து ஒன்பது ஆய்வுத் தனியலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலகக் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு தமிழாய்வு அலுவலர் என்ற பதவிப் பெயரினை மாற்றி ஒருமுகமாக உதவி இயக்குநர் பணியிடங்கள் என 1998ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியதற்கிணங்க. தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிறைவு செய்திட அரசாணை வெளியிடப்பட்டது.

இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு,தெரிவு செய்யப்பட்ட 13 நபர்களுக்கு உதவி இயக்குநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 22.09.2025 தலைமைச் செயலகத்தில் வழங்கினார். தமிழ் இலக்கியக் கல்வி கற்றவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்களாகப் பணி வாய்ப்புப் பெற்றுள்ளது தமிழுக்கான நற்காலம் மட்டுமல்ல பொற்காலமுமாகும். புதியதாகத் தெரிவு செய்யப்பட்ட 13 உதவி இயக்குநர்களுக்கு திறன் மேம்பாட்டை உறுதி செய்வதற்காகவும் காலத்திற்கேற்ப தேவையான பயிற்சிகள் வழங்கப்படுவது மிகுந்த அவசியத்தைக் கருதியும் தற்போது நடைமுறையில் உள்ள அரசுப் பணிகளுக்கான பொதுவான நடைமுறைகள் / விதிகளை அறிந்து செயலாற்றும் வண்ணம், அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியால் வழங்கப்படும் அடிப்படை பயிற்சியின் வாயிலாக, தமிழ்நாடு அரசு அடிப்படை விதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம். தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை விதிகள் 2005, தமிழ்நாடு நிதி விதித் தொகுப்பு விதிகள், அடிப்படை கணினி திறன்கள் உள்ளிட்ட இனங்களில் ரூபாய் 5 இலட்சத்து 85 ஆயிரம் செலவில் அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் 15 பணி நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை வரலாற்றில் முதன்முறையாக உதவி இயக்குநர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற்றமைக்கான தகுதிச் சான்றுகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று (30.10.2025 வியாழக்கிழமை) அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ரெ. பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ப.நி.). தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந.அருள், அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியின் உதவி இயக்குநர் ராகவேந்தர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.