Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முட்டுக்காட்டில் கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்க பணியை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு: நிர்ணயித்த காலத்திற்குள் முடிக்க உத்தரவு

சென்னை: முட்டுக்காடு கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம் அமைக்கும் பணியை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார். சென்னை அடுத்த முட்டுக்காடு பகுதியில் உருவாகி வரும் கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்க கட்டுமான பணி நிலையை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டார். இத்திட்டம் 2.6.2023 அன்று முதல்வரால் அறிவிக்கப்பட்டு, 29.5.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்த திட்ட மதிப்பு ரூ.525 கோடியில் நிலம் ஒதுக்கீடு 37.99 ஏக்கரில் அடித்தளம், முதல் தளம் என 2.08 லட்ச சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 91,924 சதுர அடியில் கண்காட்சி அரங்கம், 50,633 சதுர அடியில் பன்னோக்கு அரங்கம், 64,960 சதுர அடியில் கலையரங்கம் அமைகிறது.

இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் கடந்த மே 29ம் தேதி தொடங்கியது. 18 மாதங்களில் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் 10,000 பேர் அமரும் வகையில் கண்காட்சி அரங்கம், 5000 பேர் அமரும் வகையில் பன்னோக்கு அரங்கம், 1500 பேர் அமரும் வகையில் கலையரங்கம், உணவு கூடம், பத்திரிகையாளர் அறை, அலுவலக அறைகள், 1638 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1700 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி, டிடிசிபி அனுமதி, கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி, தீயணைப்புத் துறை அனுமதி உள்ளிட்ட அனுமதிகள் பெறப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலை ஆய்வு செய்து, பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். இத்திட்டம் நிறைவடைந்தவுடன், உலக தரத்திலான கண்காட்சி மற்றும் பன்னோக்கு அரங்கங்கள் தமிழகத்தின் சர்வதேச அடையாளமாக மாறும் என தெரிவித்தார்.