காதலிக்க மறுத்ததால் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல்: தங்கையின் கல்விச்செலவை ஏற்பதாக திமுக அறிவிப்பு
ராமேஸ்வரம்: காதலிக்க மறுத்ததால் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சேராங்கோட்டையை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் ஷாலினி (17) பிளஸ் 2 படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த முனியராஜ் (21) ஒருதலையாக காதலித்து வந்தார். காதலை ஏற்க மறுத்த ஷாலினியை, நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றபோது, முனியராஜ் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்தார். காவல்நிலையத்தில் சரணடைந்த முனியராஜ் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை டிச. 3ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஷாலினியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கு திமுக மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில் நகர்மன்ற தலைவர் நாசர்கான் உள்ளிட்டோர் நேற்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்தை ஷாலினி குடும்பத்திற்கு வழங்கினார். மேலும் கரையூர் அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் ஷாலினியின் தங்கை ஷர்மிளாவின் மேற்படிப்பு உள்ளிட்ட முழு கல்விச்செலவையும் திமுக ஏற்றுக்கொள்வதாக பெற்றோரிடம் உறுதியளித்தார்.
அப்போது, இப்பகுதியில் இருந்து மாணவிகள் வெகுதூரம் பள்ளிக்கு நடந்தே செல்கின்றனர். மாணவிகள் பாதுகாப்பாக சென்று வருவதற்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என ஷாலினியின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எம்எல்ஏ, ராமேஸ்வரம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பேருந்து இயக்க அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஷாலினியின் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசி ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஷாலினியின் தந்தை மாரியப்பன், குற்றவாளிக்கு மரணத் தண்டனை பெற்றுத்தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். சம்பவம் நடந்த சேராங்கோட்டை பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


