காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு 4 ஆண்டாக அனுமதி தரவில்லை: ஒன்றிய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வைர விழாவில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஒன்றிய அரசு தான் அனுமதி வழங்க வேண்டும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது கலைஞரின் கனவு. அதற்காக கடந்த 4 ஆண்டுகளாக தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்த போது நேரிலும், தொடர்ந்து கடிதங்கள் வாயிலாகவும் பல்வேறு முறை வலியுறுத்தினார். கடந்த ஜன.4ம் தேதி ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்த போது நானும் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு அமைச்சர் ஜேபி நட்டா பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார். இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.