அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்களின் சீராய்வுக் கூட்டம்: பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு
சென்னை: அறநிலையத்துறை மண்டல இணைஆணையர்களின் சீராய்வுக் கூட்டம் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் மண்டல இணை ஆணையர்களின் 36வது சீராய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் 19 திருக்கோயில்களில் நடந்து வரும் திருப்பணிகள், 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களின் திருப்பணிகள், கிராமப்புற மற்றும் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களின் திருப்பணிகள் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். கோயில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் எடுத்துக் கொள்ளப்பட்ட பணிகளில் முடிவுற்ற பணிகளை தவிர இதர பணிகளின் தற்போதைய நிலை மற்றும் அவற்றை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகள் மற்றும் நில அளவை பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு செய்தார். மேலும், 2021-22ம் நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான சட்டமன்ற அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகளை தவிர இதர அறிவிப்புகளை விரைந்து நிறைவேற்ற எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அன்னதானத் திட்டத்தின் செயல்பாடுகள், மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிக பயணங்கள்,
கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, புதிய திருத்தேர்கள் மற்றும் திருக்குளங்கள் உருவாக்கும் பணிகள் மற்றும் சீரமைக்கும் பணிகள், உலோகத் திருமேனி பாதுகாப்பு அறை கட்டுமானம், பசுமடங்களை மேம்படுத்துதல், கோயில் யானைகள் பராமரிப்பு, மலை கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி மற்றும் மின்தூக்கி அமைத்தல் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்தும், கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயலாக்கம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் உபகோயிலான மலைகாவலர் கோயிலில் பணிபுரிந்து பணிகாலத்தில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரர் அருண்ராஜிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை வழங்கினார்.