Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேளாண்மை கல்லூரி விவகாரம்; அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசை குறை கூறும் இபிஎஸ்: ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி

சென்னை: வேளாண்மை கல்லூரி விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆதாரமற்ற குற்றாச்சாட்டை அரசின் மீது சுமத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிப் பொறுப்பு ஏற்ற உடன் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பல அரிய திட்டங்களின் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் ஒரு தோட்டக்கலை கல்லூரியும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், கரூர் மாவட்டத்தில் கரூர், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் தலா ஒரு வேளாண்மை கல்லூரியும் அமைக்க உத்தரவிடப்பட்டு 2021-22ம் ஆண்டிலிருந்து மாணவர்கள் சேர்க்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவை ஏற்கனவே உள்ள கட்டிடங்களில் சிறப்பாக இயங்கி வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் உள்ள மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திலேயே செட்டிநாடு வேளாண்மை கல்லூரிக்கு என இடம் தேர்வு செய்யப்பட்டது. நபார்டு வங்கியின் நிதி உதவி மூலம் ரூ.61.79 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இக்கல்லூரிகளில் இதுவரை 1013 மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர். அவர்கள் படிப்பிற்கு எந்தவித இடையூறும் இன்றி அனைத்து அடிப்படை வசதிகளும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ளன. இவ்வாறு இருக்கையில் புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர். கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே. வேறு எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.