காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மகப்பேறு மருத்துவரை நியமிக்க உத்தரவிட்டார். விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று கட்டி திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்றிரவு விருதுநகர் வந்தார். ஆர்ஆர் நகரிலுள்ள விடுதியில் தங்கினார். இந்நிலையில், இன்று காலை ஆர்ஆர் நகரில் இருந்து அழகியநல்லூர், மாந்தோப்பு வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது காரியாபட்டி அரசு மருத்துவமனையில் வருகை தந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் டாக்டர்களிடம் மருத்துவ சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
இங்கு ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மருத்துவமனை கட்டிடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். பிரசவத்திற்காக மகப்பேறு மருத்துவர் இல்லாத நிலையில், வேறு மருத்துவமனையில் இருந்து மாற்றுப் பணியில் வாரம் ஒரு முறைதான் வருகின்றனர். எனவே, காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சென்னை மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலகத்திற்கு உடனடியாக தொடர்பு கொண்ட அமைச்சர், காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவரை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டார். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தள்ளனர்.