Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் சிறு துறைமுகத் திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் எ.வ.வேலு மனு

டெல்லி: தமிழகத்தில் சிறு துறைமுகத் திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டுமென ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் துறை அமைச்சர் சர்பானாந்தா சோனோவாலை பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்து சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட வேண்டிய சிறு துறைமுகத் திட்டங்களை விரைவில் செயல்படுத்த வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில்; ராமேஸ்வரம் ஒரு புனித யாத்திரைத் தலமாகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 கோடி பக்தர்கள் / சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இத்துறைமுகத்தில் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சர்வதேச படகு சேவையையும் ஊக்குவிக்கும்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் ரூ. 118 கோடி திட்ட செலவில், 250 மீட்டர் நீளமுள்ள அணுகு தோணித்துறை, சர்வதேச பயணிகள் முனையம் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) உள்ள துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் (NTCPWC) தயாரித்துள்ளது. இதன் மூலம் இராமேஸ்வரம் (இந்தியா) முதல் தலைமன்னார் (இலங்கை) இடையிலான 26 கடல் மைல் (48 கிலோமீட்டர்) துாரத்திற்கு சர்வதேச பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க முடியும்.

தோணித்துறை மற்றும் பயணிகள் முனையம் இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இலங்கையின் தலைமன்னார் வரை பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும். இராமேஸ்வரம் (இந்தியா) மற்றும் தலைமன்னார் (இலங்கை) இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு, சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ. 118 கோடி நிதி உதவி கோரி, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திடம் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியினை ஒன்றிய அரசு விரைவில் வழங்க வலியுறுத்தப்பட்டது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கப்பல்களுக்கு கிழக்கு-மேற்கு இணைப்பை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள பாம்பன் கால்வாயை மேம்படுத்துதல் (புதுமையான திட்டம்): பாக் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடாவை இணைக்கும் பாம்பன் கால்வாய் மீன்பிடி கப்பல்கள் போன்ற சிறிய கப்பல்கள் கடல் வழியாக வர்த்தகம் செய்ய உதவுகிறது. இது இந்தியாவின் கிழக்கு-மேற்கு பகுதிகளை கடல் வழியாக இணைக்கிறது. இக்கால்வாயில் தற்போதுள்ள ஆழம் 2.0 மீட்டர் மட்டுமே. 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஷெர்சர் திறப்பினை கொண்ட பழைய ரயில் பாலம், ஒரு புதிய ரயில் பாதையுடன் துாக்கு பாலமாக மாற்றப்பட்டு, பிரதமரால் 06.04.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.

நாட்டின் முதுகெலும்பாக திகழும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்திற்கு சிறிய நடுத்தர அளவிலான கப்பல்களுக்கு கடல் வழியாக கிழக்கு-மேற்கு இணைப்பை வழங்குவதுடன் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை போன்ற பாதுகாப்பு கப்பல்கள், இந்தியாவின் நீர்ப்பகுதிக்குள்ளாகவே பயணிக்க வழிவகுக்கும். இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம், பாம்பன் கால்வாயை துார்வாருவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது.

சென்னை (துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம்) விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தவுடன், இந்தியாவின் தெற்குப் பகுதியில் கடல் வழியாக கிழக்கு-மேற்கு இணைப்பை உறுதி செய்வதற்கு சாகர்மாலா திட்டத்தின் கீழ் 100% மானியமாக இத்திட்டத்திற்கான நிதி உதவியினை ஒன்றிய அரசு வழங்க வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதுடன், பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகுவதுடன், இம்மாவட்டத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும்பங்காற்றும்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி A.K.S. விஜயன், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா, தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலாளர் / துணைத்தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் தி.ந. வெங்கடேஷ், உள்ளுறை ஆணையாளர் ஆஷிஷ் குமார், மற்றும் சிறப்பு தொழில்நுட்ப பொறியாளர் சந்திரசேகர் அவர்களும் உடன் இருந்தனர். இந்நிகழ்வினைத் தொடர்ந்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறைச்செயலாளர் T.K. இராமச்சந்திரன், அவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.