சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘‘சிறந்த நூலகர்களுக்கான விருதுவழங்கும் விழா’’ நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 65 நூலகர்களுக்கு விருதுகள் வழங்கினார். இந்திய நூலகத் தந்தை என போற்றப்படும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கனாதன் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் சிறப்பாக சேவையாற்றும் நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கனாதன் விருதுவழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். மேலும், நூல்களையும் வாசகர்களையும் இணைக்கும் உத்தனதமான பணியை மேற்கொண்டு தாங்கள் பணியாற்றும் நூலகர்களின் வளர்ச்சிப் பணியை தொடர்ந்து இந்த ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய 40 நூலகர்களுக்கு மேற்கண்ட விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். விருதுகளுடன் சிறப்பு சான்றிதழ், 50 கிராம் வெள்ளிப் பதக்கம், மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
மேலும், மாநில அளவில் அதிக உறுப்பினர்கள், புரவலர்கள் சேர்த்தல் மற்றும் அதிக நன்கொடை பெற்ற மாவட்ட மைய நூலகம், முழுநேர கிளை நூலகம், ஊர்ப்புற நூலகங்களுக்கு தலா 4 கேடயங்கள் வீதம் 12 கேடயங்கள் வழங்கப்பட்டன. மாநில அளவில் கட்டடம் கட்டுதல், பராமரிப்பு பணிகளுக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் 3 பேருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. பொதுமக்களிடையே, வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும், நூலக வளர்ச்சிக்கும், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திய மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய 25 வாசகர் வட்டத் தலைவர்களுக்கு ‘நூலக ஆர்வலர் விருது’ம் வழங்கப்பட்டது.


