Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை : பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் இன்று (01.12.2025) அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இஆப, அவர்கள் உடனிருந்தார்.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது வருகின்ற 03.12.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் நிறுத்தங்களில் பக்தர்களுக்காக குடிநீர், மின் விளக்குகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்கள்.

மேலும் மாநகராட்சி சார்பாக கிரிவலப்பாதை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள் மற்றும் நெடுஞ்சாலை த்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் மையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து குடிநிர் குழாய்கள் முறையாக இயங்குகிறதா, நீர் ஏற்றும் இயந்திரங்கள் முறையாக இயங்குகின்றனவா என்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை சார்பாக திருக்கோவில் வளாகம், மாடவீதி, மற்றும் கிரிவல பாதையில் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ குழுக்களின் அமைவிடங்கள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது :-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021 சட்டமன்ற தேர்தலின் போது அருணாசலேஸ்வரர் திருக்கோயில் தேரோடும் வீதியை சிமெண்ட் கான்கிரீட் சாலையாக அமைக்கப்படும் என தெரிவித்தார்கள் அதன்படி அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்கள். நேற்றைய தினம் மாடவீதியில் புதிதாக போடப்பட்ட கான்கிரீட் சாலையில் எவ்வித சிரமமின்றி திருத்தேர் ஓடியது, தேரோடும் விதியை விரிவுபடுத்தி தராமான வகையில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது என ஆன்மிக பெருமக்கள் பலரும் பாராட்டிவருகின்றனர். திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளன்று பக்தர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பிரத்தியேக ஆன்ட்ராய்டு செயலி நிறுவப்பட்டுள்ளது. இந்த செயலியில் பக்தர்கள் எளிதாக அறிந்துகொள்ள ஏதுவாக பொது தகவல்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் நிறுத்துமிடங்கள், மருத்துவ முகாம்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள்,காவல் சேவை மையங்கள், கழிவறைகள், அவசர உதவி 108 ஆம்புலன்ஸ், அவசர மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை இருக்குமிடங்கள் குறித்தும், அவசர தேவைக்கான கட்டுபாட்டு உதவி எண்கள், காணாமல் போன குழந்தைகளை கண்டறிய உதவி எண்கள், திருக்கோயில் பற்றிய விவரங்கள் ஆகியவைகளை இந்த செயலில் அறிந்துகொள்ளலாம்.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே வருகை தருகின்ற பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி ஆகிய துறைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 130 கார் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து துறை சார்பாக 4764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. (கடந்த ஆண்டை விட கூடுதலாக 20% பேருந்து நடைகள் இயக்கப்படுகின்றன), தற்காலிக பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் ஏற்படும் நேரத்தில் 40 ஸ்பேர் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, தீப நாளன்று பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையம், கார் நிறுத்தங்கள் மற்றும் கிரிவலப்பாதை இடையே பயணிக்க எதுவாக கட்டணமில்லாமல் 220 தனியார், பள்ளி கல்லூரி பேருந்துகள் 24/7 நேரமும் போதிய அளவில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் ரூ.10/- குறைந்த பட்ச கட்டணத்தில் 200 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் தீப நாளன்று இயக்கப்பட உள்ளன. அதற்கேற்ப தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் நிறுத்துமிடங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின் விளக்குகள், கழிவறை, காவல் துறை பாதுகாப்பு மையங்கள், உதவி மையங்கள், பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் தகவல் பலகைகள், உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை பணிகளையும் ஒருங்கிணைக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் திறம்பட. மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மாநகராட்சி சார்பாக 51 இடங்களில் குடிநீர் வசதிகளும், நெடுஞ்சாலைத்துறை சார்பாக 14 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

38 இடங்களில் கழிப்பிட வசதிகள், 720 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை சார்பாக திருக்கோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவர்களுடன் 7 மருத்துவ குழுக்களும், மாடவீதி, மற்றும் கிரிவல பாதையில் 90 மருத்துவ குழுக்களும் நிறுவப்பட உள்ளது. 45 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்களும், 5 பைக் ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக போதிய அளவிலான காவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர், திருக்கோயில் வளாகம், மாடவீதி மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 இடங்களில் காவலர் கண்காணிப்பு கோபுரங்கள், 61 இடங்களில் உதவி மையங்கள், 454 இடங்களில் பொது அறிவிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட தகவல் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்துகொள்ள கார்த்திகை தீபம் செயலியை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.