உயிரிழந்த 229 பேரின் உடல் 12 மணி நேரத்தில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது : அகமதாபாத் விமான விபத்தை சுட்டிக் காட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!!
சென்னை : உடற்கூராய்வில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்யப்பட்டது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் விளக்கம் அளித்தார். அதில், "சம்பவம் நடைபெற்ற உடனே முதலமைச்சர் உடனடியாக அரசு செயலாளரை தொடர்பு கொண்டு கூடுதல் மருத்துவர்களை அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அவசர நிலையை கருதி கரூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று 41 பேருக்கு உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. நள்ளிரவில் தொடங்கிய உடற்கூராய்வு 14 மணி நேரம் நடைபெற்றது.
கரூர் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 2 மேசைகள் இருந்த நிலையில் கூடுதலாக 3 மேசைகள் அமைத்து உடற்கூராய்வு செய்யப்பட்டது.கரூரில் இருந்த 3 மருத்துவர்கள், வரவழைக்கப்பட்ட 22 மருத்துவர்கள் என மொத்தம் 25 மருத்துவர்கள் உடற்கூராய்வில் ஈடுபட்டனர். 28ம் தேதி மாலை 4 மணி வரை பிரேத பரிசோதனை பணி நடைபெற்றது. அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 229 பேரின் உடல் 12 மணி நேரத்தில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உடற்கூறாய்வை வைத்து அரசியல் செய்வது, சந்தேகம் எழுப்புவது ஏற்புடையதல்ல. அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது; இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.உச்சநீதிமன்ற வழக்கில் தேவைப்பட்டால் வீடியோ பதிவை சமர்பிக்க தயாராக உள்ளோம்,"இவ்வாறு தெரிவித்தார்.