Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை பூங்கா நகர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கில் பங்கேற்று சிறப்பித்தார் அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை: 300 ஆண்டுகள் பழமையான பூங்கா நகர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று சிறப்பித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று சென்னை, பூங்கா நகர், அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்விற்குபின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில்;

சென்னை, பூங்கா நகர் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலானது சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாகும். இத்திருக்கோயிலுக்கு ரூ.5 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19 ஆண்டுகளுக்கு பின், இன்று வெகு விமரிசையாக குடமுழுக்கு நடந்தேறியிருக்கின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அமைந்தபின், இன்றைய தினம் நடைபெற்ற 11 திருக்கோயில்களின் குடமுழுக்கையும் சேர்த்து 3,412 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அதில் 722 சிவன் திருக்கோயில்களும், 468 விநாயகர் திருக்கோயில்களும், 1,023 அம்மன் திருக்கோயில்களும், 523 பெருமாள் திருக்கோயில்களும், 47 ஆஞ்சநேயர் திருக்கோயில்களும், 48 கிருஷ்ணன் திருக்கோயில்களும், அறுபடை வீடுகளை சேர்ந்த திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி திருக்கோயில்கள் உள்பட 132 முருகன் திருக்கோயில்களும் அடங்கும்.

திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,822 கோடி மதிப்பிலான 7,910 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.6,980 கோடி மதிப்பீட்டில் 27,563 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் உபயதாரர்கள் மட்டும் ரூ.1,467 கோடி மதிப்பிலான திருப்பணிகளை செய்து தருகின்றனர். மாநில வல்லுநர் குழுவால் 13,931 திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளுக்கு உறுதுணையாய் இருந்து வரும் முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும் துறையின் செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அலுவலர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்வதற்கான திருப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இராஜகோபுர திருப்பணிக்கு மூன்றுமுறை ஒப்பந்தம் கோரப்பட்டும் நிறைவு செய்யப்படாததால் சற்று சுணக்கம் ஏற்பட்டது. அதனை விரைவுப்படுத்துவதற்கு ஆய்வு கூட்டங்களை நடத்தி அறிவுரைகளை வழங்கியுள்ளோம். வருகின்ற 30 ஆம் தேதிக்குள் நானும், துறையின் அலுவலர்களும் நேரடியாக கள ஆய்வு செய்து விரைவில் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., துணை ஆணையர் இரா.ஹரிஹரன், உதவி ஆணையர் க.சிவக்குமார், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜே.அசோக்குமார் முந்திரா, அறங்காவலர்கள் ப.வெங்கடேசன், பு.நலேந்திர குமார், பா.சசிகலா, ம.முத்துகுமார், செயல் அலுவலர் இரா.முத்துசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.