பெரம்பூர்: சென்னை திருவிக. நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேடவாக்கம் டேங்க் ரோடு பகுதியில் ஓஎஸ்ஆர் நிலத்தில் 39.50 லட்ச ரூபாயில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், தாயகம் கவி எம்எல்ஏ, மேயர் பிரியா, மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் கலந்துகொண்டனர். இதையடுத்து சேமாத்தம்மன் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மண்டப கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இதன்பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது;
திமுக அரசு அமைந்த பிறகு 1547 கோடி ரூபாய் உபயதாரர் நிதியாக பெறப்பட்டு திருக்கோயில் திருப்பணிகள் நடந்துள்ளது. இந்த ஆட்சிக்கு பிறகுதான் 11,904 திருக்கோயில்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சேமாத்தம்மன் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலில் மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோயில் திருக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் தமிழக பக்தர்களுக்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, ‘’ஐயப்பன் கோயிலில் சுழற்சி முறையில் 2 பணியாளர்களை தேவஸ்தான போர்டில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் சென்னை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையம் அமைத்துள்ளோம். தேனி, கேரளாவை சுற்றியுள்ள மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளோம்’ என்றார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த கேள்விக்கு, ‘’கார்த்திகை தீபத்தில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 20 சதவீத மக்கள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த முறை 60 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது. அதிக இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்படும். தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள் தயாராக உள்ளனர். இந்த விழா முடியும் வரை சிறப்பு கட்டண தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது’ என்றார்.


