சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் இன்று மொரிசியஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹம்பிராஜன் நரசிம்ஹென் அவர்கள் சந்தித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை இன்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மொரிசியஸ் நாட்டின் வெளியுறவு துறை, பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் மொரிசியஸ் குடியரசின் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் ஹம்பிராஜன் நரசிம்ஹென் (Hambyrajen Narsinghen) அவர்கள் ஆகியோர் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், உயர் மருத்துவ சிகிச்சைகள் குறித்த பயிற்சி, மருந்து கொள்முதல், இந்திய மருத்துவத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள், மருத்துவ சுற்றுலா போன்ற மருத்துவ தேவைகள், வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆணையர் திரு.லால்வேனா, இ.ஆ.ப. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதிதுறை ஆணையர் திருமதி.விஜயலட்சுமி, இ.ஆ.ப., தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் திருமதி.சீதாலட்சுமி, இ.ஆ.ப. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் மரு.சித்ரா, சென்னை மொரீஷியஸின் கௌரவ தூதர் மலையப்பன் நாகலிங்கம் மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.