Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பி.எட்,எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும்: அமைச்சர் கோவி.செழியன்

சென்னை : அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி 20.06.2025 அன்று சென்னை இராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26ஆம் ஆண்டிற்கான பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, மாணாக்கர் சேர்க்கை நடைபெற்றது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன.

இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி இன்று (15.09.2025) முதல் 30.09.2025 வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணாக்கர் சேர்க்கைக்கான கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதளத்தில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணாக்கர்கள் சேர்ந்து பயில ஏதுவாக மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி 30.09.2025 வரை செயல்படும்.

விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.