*கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய உத்தரவு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாதாங்கோயில் தெருவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன், இங்குள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தூத்துக்குடி மாநகரில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
சில பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மழைநீர் தெருவில் தேங்கும் நிலை உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 29வது வார்டிற்குட்பட்ட மாதாங்கோயில் தெருவில் கழிவுநீர் கால்வாய் உடைந்து கழிவு நீர் தெருவில் தேங்கி நிற்பதாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவனுக்கு தகவல் தெருவிக்கப்பட்டது.
இதையடுத்து மாதாங்கோயில் தெருவிற்கு சென்ற அமைச்சர் கீதாஜீவன், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள கழிவுநீர் கால்வாயை உடனடியாக சரிசெய்து புதிய குழாய் அமைத்து கழிவு நீரை அருகில் உள்ள பிரதான கால்வாயில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது திமுக வட்டச்செயலாளர் கதிரேசன், பெருமாள் கோயில் முன்னாற் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
