Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்: உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 8 பேர் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒரு நீதிபதி மட்டும் அதிகாரம் இல்லை என தீர்ப்பு வழங்கினார். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீது இதுவரை ஒன்றிய அரசு விதித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வரியை திரும்ப பெறுவது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் மாநிலங்கள் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தன. இதுகுறித்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.கபாடியா தலைமையிலான அமர்வு, கடந்த 2011ம் ஆண்டு நேரடியாக 9 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்றி பரிந்துரை செய்தது.

அதன்படி, கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளதா? இல்லையா? என்பது குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஏ.எஸ் ஓகா, பி.வி.நாகரத்னா, ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மூன்று மாதங்களாக விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கனிமங்கள் மீதான ராயல்டி என்பது வரியா? மற்றும் மாநிலங்கள் கூடுதலாக விதிக்கும் வரிகள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டதா? ஆகிய கேள்விகளுக்கு விடை காணும் விதமாக உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் எட்டு நீதிபதிகள் ஒரு உத்தரவும், அதேபோன்று நீதிபதி பி.வி.நாகரத்னா ஒரு தீர்ப்பையும் நேற்று வழங்கி உள்ளனர். நேற்று காலை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் 8 நீதிபதிகளின் ஒருமித்த கருத்து அடங்கிய தீர்ப்பை வாசித்தார். அதில், “சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை நாடாளுமன்றத்தின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்(மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) 1957 சட்டம் வரையறுக்கவில்லை.

அரசியலமைப்பின் பட்டியல் 2 பிரிவு 50ன்கீழ் கனிம வளங்களுக்கு வரி விதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்பின் 246வது பிரிவின்கீழ் மாநில சட்டமன்றங்களே சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை பெறுகின்றன. கனிமம் பிரித்தெடுக்கும் வரை இதை ஆராய வேண்டியுள்ளது. கனிம வளம் அமைந்துள்ள ஒன்றிய நிலப்பரப்பு என்பது மாநில அரசாங்கத்திடம் உள்ளது. கனிமங்களுக்கான உரிமை மாநில அரசாங்கத்திடம் உள்ளது. ஆனால் இது முறையாக கையாளப்படாததால் முந்தைய ஏழு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை மாற்றி அமைக்கிறோம்.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் 1957 சட்டப்பிரிவின் கீழ் கனிம வளங்கள் மீதான வரி விதிப்புக்கு இருந்த உரிமை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்ததில், அவ்வாறு உரிமைகள் பறிக்கப்படவில்லை என்று தெளிவாக தெரிய வந்துள்ளது. இதேபோல் ராயல்டி எனப்படுவது வரியின் வகைப்பாட்டுக்குள் வரவில்லை. ராயல்டி என்பதை வரி வகைபாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன்பானது என வழங்கப்பட்ட இந்தியா சிமெண்ட்ஸ் தீர்ப்பு என்பது தவறானது. சுரங்க நடவடிக்கைகளில் செலுத்தப்படும் ராயல்டி என்பது வரி கிடையாது.

ராயல்டி எனப்படுவது குத்தகைதாரர்களால் குத்தகை விடுவோருக்கு தரப்படும் குத்தகை பணம்தான். இவற்றின் அடிப்படையில் பார்த்தால் எண்டிரி ஐம்பதில் பட்டியல் ஒன்றின் கீழ் கனிம உரிமைகளுக்கு நாடாளுமன்றத்தால் கண்டிப்பாக வரி விதிக்க இயலாது. மேலும் நாடாளுமன்றம் ஒரு வரம்பை விதிக்காத வரையில், கனிம உரிமைகள் மீது வரிகளை விதிக்கும் மாநிலத்தின் உரிமை பாதிக்கப்படாது” என தீர்ப்பு வழங்கினார். 9 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும், “சுரங்கங்கள் மற்றும் கனிமங்களை கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை” என தீர்ப்பு அளித்தார்.

* கனிம வளம் அமைந்துள்ள நிலப்பரப்பு என்பது மாநில அரசாங்கத்திடம் உள்ளது.

* அரசியலமைப்பு சட்டத்தின்படி கனிம வளங்களுக்கு வரி விதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

* மாநில சட்டப்பேரவைகளே சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை பெறுகின்றன.

* நாடாளுமன்றம் ஒரு வரம்பை விதிக்காத வரையில், கனிம உரிமைகள் மீது வரிகளை விதிக்கும் மாநிலத்தின் உரிமை பாதிக்கப்படாது.