கனிம அகழ்வு திட்டங்களுக்கு அனுமதி உத்தரவை ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்: மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் இருக்கும் 24 வகை முக்கிய கனிமங்களையும் ஆறு வகையான அணுகனிமங்களையும் அகழ்ந்து எடுப்பதற்கு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்த தேவை இல்லை என்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. மோனோசைட் மற்றும் முதல் நிலை அணு மின் உற்பத்தியில் எரி பொருளாக பயன்படுத்தப்படும் யுரோனியம் மற்றும் தாது மணலை அமர்ந்திருக்கும் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக் கேட்டு கூட்டம் நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அணுசக்தித் துறை சுற்றுச்சூழல் துறைக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறது. இதனைப் பரிசீலித்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கனிமங்களை அகழ்ந்து எடுக்கும் திட்டங்களுக்காகப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும் அகழ்ந்தெடுக்கப்படும் நிலப்பரப்பு சிறிய பகுதியாக இருந்தாலும் இந்ததிட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தான் மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் மாநில அரசு தலையிட முடியாது. கனிமவளங்கள் குறித்த ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஆபத்தான போக்காகும். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் உடல் நலனில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். சுற்றுச்சூழலும் படுமோசமாக மாசடையும் பேராபத்து உள்ளது. இந்த முடிவை ஒன்றிய அரசு வெறும் அலுவல் உத்தரவாக வெளியிட்டிருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது. மாநில அரசின் உரிமையைப் பறிப்பதோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை உண்டாக்குகிற இந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாட வேண்டும். ஒன்றிய அரசு இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.