Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கனிமங்கள் எடுக்கும் திட்டங்களுக்கு மக்கள் கருத்து தேவையில்லை என்பது ஜனநாயகப் படுகொலை: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

சென்னை: கனிமங்கள் எடுக்கும் திட்டங்களுக்கு மக்கள் கருத்து தேவையில்லை என்பது ஜனநாயகப் படுகொலை என சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; அணுக் கனிமங்கள், முக்கியக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டங்களுக்கு இனிமேல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படாது என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகும்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வேதாந்தா குழுமத்திற்கு வழங்கியதைக் கண்டித்து மதுரை மக்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தோம். நாடாளுமன்றத்திலும், நிலைக்குழுவிலும் இப்போராட்டம் தொடர்ந்தது. அதனடிப்படியையில் ஜனவரி 24, 2025ல் இந்த ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்திருந்தது.

இப்போது டங்ஸ்டன் உள்ளிட்ட முக்கியக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதிலிருந்து ஒன்றிய அரசு விலக்களித்துள்ளது. மேலும் இதுபோன்ற திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பங்களை ஒன்றிய அரசே பரிசீலித்து வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்கள் குறித்துப் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூறுவது மிக அவசியமானதாகும். அத்தகைய ஜனநாயக நடைமுறையை முடக்குவது சட்டவிரோத நடவடிக்கையாகும்.

கனிமங்களை அரியவகை கனிமங்கள் என்று பட்டியலிட்டு அதனை ஏலம் விடும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறித்த மோடி அரசு இப்பொழுது சுற்றுச்சூழல் அனுமதிக்கான உரிமையையும் பறித்துள்ளது.

இந்தியாவின் கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கவே பா.ஜ.க. அரசு இதைச் செய்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய ஒன்றை வெறும் அலுவல் உத்தரவு மூலமாக நடைமுறைப்படுத்துவது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீறும் எதேச்சதிகார செயலாகும்.

மோடி அரசு தனது பெருமுதலாளித்துவ நண்பர்களுக்காக ஜனநாயக நடைமுறையை, மாநில உரிமையை, நாடாளுமன்ற உரிமையை சிதைக்க முயல்வது முதல் முறையல்ல. அரியவகை கனிமங்களையும், அதனினும் முக்கியமான இந்திய ஜனநாயக அடிப்படையையும் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

பெரும் கார்ப்ரேட்டுகளின் மீது மோடி அரசுக்கு இருக்கும் விசுவாசத்திற்கு ஜனநாயகச் சட்டங்களையும், மாநில உரிமைகளையும் பலிகொடுப்பதை ஏற்க முடியாது. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் இவ்வுத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.