சென்னை: பால் பதப்படுத்தும் நிறுவனம் தொடங்க உரிமம் பெற்று தருவதாக ரூ.16 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த பால் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை அசோக்நகர் 48வது அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(53). இவருக்கு அச்சிறுப்பாக்கத்தை அடுத்து கயப்பாக்கம் என்ற இடத்தில் விளை நிலம் உள்ளது. இவரது நிலத்தில் 2017ம் ஆண்டு முதல் அவருக்கு தெரிந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். மேற்படி நிலத்தில் பால் பதப்படுத்தும் நிறுவனம் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும் என்று, கண்ணனிடம் ராஜேஷ் கண்ணன் கூறியுள்ளார்.
அதற்காக அனுமதியை அரசிடம் பெற்று தருவதாகவும் கூறி ரூ.16 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால் இதுவரை பால் பதப்படுத்தும் நிறுவனம் தொடங்குவதற்கான உரிமம் அரசிடம் இருந்து பெற்று தரவில்லை. இதையடுத்து கண்ணன் ரூ.16 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த ராஜேஷ்கண்ணன் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்திய போது, ராஜேஷ் கண்ணன் பணம் பெற்று மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் ராஜேஷ்கண்ணன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று கைது செய்தனர்