தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா; பசும்பொன்னில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம்: காவடி, அலகு குத்தி வந்து மரியாதை
ராமநாதபுரம்: கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி, காவடி, ஜோதி, அலகு குத்தி, வேல் எடுத்து வந்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில், 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜை, திருவிளக்கு பூஜை, தேவர் ரதம் வீதி மற்றும் லட்ச்சார்ச்சனை நடந்தது. இரண்டாம் நாளான ேநற்று ஆன்மீக சொற்பொழிவு, பஜனை, கூட்டு பிரார்த்தனை, லட்சார்ச்சனை நடந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தும், இளைஞர்கள் ஜோதி, வேல்குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மூன்றாம் நாள் இன்று ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மரியாதை செலுத்தினர். பல்வேறு ஊர்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சிரமமின்றி வந்து சென்றனர். தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
