ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ராணுவ பயிற்சியின் போது குறி தவறிய ஏவுகணை கிராமத்தின் அருகே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம்,போக்ரான் துப்பாக்கிசுடும் பயிற்சி மைதானத்தில் பாதுகாப்பு படையினருக்கான பயிற்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த பயிற்சியின் போது,ஏவுகணை சோதனை நடந்தது. அப்போது ஏவுகணை குறி தவறியதால் படாரியா என்ற கிராமத்திற்கு 500 மீட்டர் தொலைவில் விழுந்தன.
இந்த ஏவுகணை பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. இந்த சத்தம் பல கிமீ தூரம் வரை கேட்டது. இதனால் கிராம மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டது. இதில் எந்த உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில்,பாதுகாப்பு படை பயிற்சியின் போது,ஒரு ஏவுகணை குறி தவறிய நிலையில்,படாரியா கிராமத்தின் அருகே பயங்கர சத்தத்துடன் விழுந்தது.
துப்பாக்கிசுடும் தளத்திற்கு உள்பட்ட பகுதியில் தான் ஏவுகணையின் பாகம் விழுந்துள்ளது. இது வழக்கமான ஒரு பயற்சியாகும் என்று தெரிவித்தன. அதிகாரிகள் கூறுகையில். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும்,ராணுவம், விமான படை மற்றும் போலீஸ் படையினர் குறிப்பிட்ட கிராம பகுதிக்கு சென்று ஏவுகணையின் பாகங்களை மீட்டு ஒரு வாகனத்தில் எடுத்து சென்றனர்.

