சென்னை: மிலாது நபி, ஓணம் பண்டிகையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஓணத் திருநாள் வாழ்த்துச் செய்தி:
அறுவடைத் திருநாளாம் ஓணத்தினை எழுச்சியோடும் ஏற்றத்தோடும் கொண்டாடும் என் மனதிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள். கேரள மக்களின் சகோதர உணர்வையும் வெளிப்படுத்தும் கொண்டாட்டமாக அமைந்துள்ள திருநாள்தான் ஓணம்.
“மாயோன் மேய ஓண நன்னாள்” எனச் சங்கத் தமிழிலக்கியத்திலும் பதிவாகியுள்ள, திராவிட இனத்தின் திருவிழாவாகத் திருவோணம் விளங்குகிறது. ஓணத்தின் மீது சமத்துவத்துக்கு எதிரான குழுவினர் புனைந்த கதைகளில் இருந்தும், நம் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து, நல்லாட்சி புரிந்த மாவலி மன்னனை நினைவுகூரும் கொண்டாட்டமாக மலையாளிகள் ஓணத்தைப் போற்றி வருகின்றனர். திராவிட உணர்வெழுச்சியுடன் தமிழ்நாட்டுக்கு உறுதுணையாக நின்று, தென்னகத்தின் தனிச்சிறப்பைப் பறைசாற்றும் மலையாளச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இந்த ஓணம் பொன்னோணமாகத் திகழ எனது வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மிலாது நபி வாழ்த்துச் செய்தியில், ‘நபிகள் நாயகத்தின் பிறந்தநாளினை கொண்டாடிடும் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது மீலாதுன் நபி வாழ்த்துகள்! உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையோடு நடத்துதல் என உலகத்துக்கு என்றென்றும் தேவையான நற்கருத்துகளை போதித்த உயர்ந்த உள்ளமாக திகழ்ந்தவர் அண்ணல் நபி அவர்கள். அவரது போதனைகளை பின்பற்றி வாழ்ந்திடும் இஸ்லாமிய உடன்பிறப்புகளின் உரிமைகளுக்கும், நலனுக்கும் என்றும் உழைத்திடும் அரசாக கழக அரசு ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும்போதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உங்களில் ஒருவராகவே இருந்து செயல்படும் அரசின் சார்பில், எனது அன்பார்ந்த மிலாது நபி வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்,’ என்றார்.