*வனத்துறையினர் போராடி மீட்டனர்
அருமனை : அருமனை அருகே செந்நாய்கள் விரட்டியதால் காட்டில் இருந்து தப்பி வந்த மிளா வீட்டிற்குள் புகுந்தது. அதை வனத்துறையினர் போராடி மீட்டனர்.குமரி மாவட்டம் கடையல் செங்கிட்டவிளைவீடு பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம்(57). இவர் தனது வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளார்.
வீட்டின் பின்னால் சமையல் அறையுடன் விறகுகளை வைப்பதற்காக ஒரு அறையும் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை சுமார் 8 மணியளவில் இப்ராகிம்மின் மாமியார் சுபேதா வீட்டின் பின்னால் இருந்த சமையல் அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அரிசி உள்ளிட்ட பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுபேதா விறகுகள் வைக்கும் அறையை பார்த்துள்ளார். அங்கு ஒரு விலங்கு நின்றது. அதை பசு மாடு என கருதி சத்தம் போட்டுள்ளார். மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த இப்ராகிம் பின்னால் வந்து பார்த்துள்ளார்.
அப்போது தான் தனது வீட்டிற்குள் புகுந்து இருப்பது மிளா என்று தெரியவந்தது. வனத்தில் இருந்து தப்பி வந்த மிளா மிரட்சியுடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து இப்ராகிம் களியல் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனசரகர் முகைதீன் தலைமையில் வன ஊழியர்கள், கடையல் சமூக சேவை கூட்டமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.
இப்ராகிம் வீட்டிற்குள் புகுந்த மிளா பெண் மிளா என்பதும், சுமார் 200 கிலோ எடை இருப்பதும் தெரியவந்தது. 3 வயதே ஆன பெண் மிளா காட்டில் உள்ள செந்நாய்கள் விரட்டியதில் தப்பி வந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
மிளாவின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தன. இதனால் மிளா அந்த பகுதியில் பல்வேறு விளைநிலங்கள், வீடுகளில் உள்ள காம்பவுண்ட் சுவர்களை கடந்து, இப்ராகிம் வீட்டின் பின்னால் உள்ள சுமார் 6 அடி உயரம் உள்ள காம்பவுண்ட் சுவற்றை தாண்டி வந்ததால், காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.
வனத்துறையினர் அறையில் இருந்து மிளாவை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கினர். வீட்டை சுற்றி டைல்ஸ் பதிக்கப்பட்டு இருந்ததால், மிளா வழுக்கி விழுந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் வலையை விரித்து மிளாவை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மிளாவை பிடித்தனர். தொடர்ந்து மிளாவின் கால்களை கட்டி மினி டெம்போவில் ஏற்றினர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியான குந்திரிக்கம்காட்டில் மிளாவை விட்டனர்.