திருவள்ளூர்: காட்டுப்பள்ளி துறைமுகத்தில் போராட்டத்தின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர் என ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமர் பிரசாத் பணிபுரிந்து வந்தார். நேற்று நள்ளிரவு அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும் போது தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சடலத்தை மீட்ட காட்டூர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த அமர் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதை அடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் அவர்களை போலீசார் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர் என ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 70 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.