Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடுத்தர, ஏழை, எளிய மக்களை கசக்கிப் பிழிந்த ஜிஎஸ்டி வரிகளை குறைத்தது காலதாமதமான நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

அவனியாபுரம்: நடுத்தர, ஏழை, எளிய மக்களை கசக்கிப் பிழிந்த ஜிஎஸ்டி வரிகளை குறைத்தது காலதாமதமான நடவடிக்கை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் செய்துள்ள மாற்றங்களை வரவேற்கிறோம். இதுதொடர்பாக கடந்த 8 ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். அவர்கள் எதையும் கேட்கவில்லை. தற்போது ஜிஎஸ்டியை குறைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 8 ஆண்டு கழித்து தவறுகளை உணர்ந்த ஒன்றிய அரசை பாராட்டுகிறேன். கடந்த 2007ம் ஆண்டே ஜிஎஸ்டியில் பல்வேறு வரி விகிதங்கள் தவறானது என ஒன்றிய அரசுக்கு சுட்டிக் காட்டினோம். அப்போது தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அர்ஜூன் சுப்ரமணியத்திடம், ஜிஎஸ்டியில் உள்ள பல்வேறு குளறுபடிகளை எடுத்துக் கூறினோம்.

நிதியமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ நாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளோம். பல தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், இந்த தவறுகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவற்றை இப்போது நீக்கி உள்ளார்கள். நடுத்தர, ஏழை, எளிய மக்களை கசக்கிப் பிழிந்த 18 மற்றும் 28 சதவீத வரிகளை தற்போது 5 சதவீதமாக குறைத்திருப்பது காலதாமதமான நடவடிக்கை. தற்போது 5 சதவீத வரி பொருந்தும் பொருள்களுக்கு கடந்த காலங்களில் 12 முதல் 18 சதவீத வரி வசூலிக்கப்பட்டது. இவை ஏன் கடந்த காலங்களில் பொருந்தவில்லை? இத்தனை ஆண்டுகளாக குறைக்காமல் தற்போது குறைத்துள்ளீர்கள். கடந்தாண்டு வரிச்சுமை என்பது தெரியாதா? இப்போதாவது மனம் திருந்தி வரி விகிதங்களை குறைத்ததற்கு பாராட்டுகிறேன். இவ்வாறு கூறினார்.

பீகார் தேர்தல் காரணமா?

ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஜிஎஸ்டியை மாற்றி அமைத்தது பீகார் தேர்தலா? மந்தமான வளர்ச்சியா? அல்லது டிரம்பின் வரி விதிப்பு கொள்கையா? அல்லது இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தா’’ என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.