Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி, அமித்ஷாவை முன்னிலைப்படுத்திய செங்கோட்டையன்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கோவை: அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியை பாஜவுடன் அடமானம் வைக்கும் அளவுக்கு அதிமுக முக்கிய நிர்வாகிகள் செயல்பட்டு வருவது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மோடி, அமித்ஷா ஆகிய இருவரையும் புகழ்ந்து பேசுவதில் அக்கட்சி தலைவர்களிடையே பெரும் போட்டியே நிலவி வருகின்றது. டெல்லிக்கு தனியாக சென்று பாஜ நிர்வாகிகளை ரகசியமாக சந்திப்பது, ஆலோசனை நடத்துவது என இருந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தை பார்வையிட வந்தேன் என்று கூறிவிட்டு பல கார்களில் மாறிமாறி சென்று அமித்ஷாவை ரகசியமாக சந்தித்து பேசினார். இதே போல கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற செங்கோட்டையன் மனக்கஷ்டமாக இருப்பதால் ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தார். அதிமுக முக்கிய தலைவர்களின் பலவீனங்களை தெரிந்து வைத்துள்ள டெல்லி பாஜ தலைமை ஒவ்வொவரையும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவித்து வருகின்றது.

வேறுவழியின்றி இவர்களும் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது எந்த அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது என்றால் அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரையும், அம்மா.... அம்மா.... என்று புகழ்ந்து வந்த ஜெயலலிதாவையும் பின்னுக்கு தள்ளி ஒதுக்கிவிட்டு, பாஜ தலைவர்களான மோடியும், அமித்ஷாவையும் முன்னிலைப்படுத்தும் அளவுக்கு இன்றைக்கு நிலைமை உருவாகிவிட்டது.

அதிமுக இணைப்பு தொடர்பாக போர்க்கொடி தூக்கி உள்ள செங்கோட்டையன் நேற்று துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், ‘இன்றைய உலக தலைவர்களில் முதன்மை தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்ற இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒரு வரலாற்று நாயகனாக திகழ்ந்து வருகிற பாரத பிரதமர் போற்றுதலுக்குரிய எல்லோர் நெஞ்சங்களிலும் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நரேந்திர மோடியும், இரும்பு மனிதராக இந்திய திருநாட்டை பேணிக் காத்து வருகிற அமித்ஷாவும் இந்த நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை முன்மொழிந்து இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடி, அமித்ஷா பெயர்களுக்கு பிறகுதான் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் இந்த வாழ்த்து செய்தியானது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி இருப்பதோடு நெட்டிசன்களின் கடும் விமர்சனங்களுக்கும் செங்கோட்டையன் ஆளாகி உள்ளார்.