குவாதலஜாரா: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிச், கொலம்பியாவின் கமிலாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மெக்சிகோவின் குவாதலஜாரா நகரில் 500 தரவரிசைப் புள்ளிகளுக்கான டபிள்யூடிஏ பெண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. அமெரிக்காவின் இவா ஜோவிச் (17 வயது, 73வது ரேங்க்), கொலம்பியாவின் கமிலா ஒசாரியோ (23 வயது, 69வது ரேங்க்) மோதினர்.
அதில், இவா ஒரு மணி 29 நிமிடங்களில் 6-4, 6-2 என நேர் செட்களில் கமிலாவை வீழ்த்தினார். அதன் மூலம் காலிறுதிக்கு இவா முன்னேறியுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை எல்சா ஜாக்குமேட் (22 வயது, 83வது ரேங்க்), தொடரின் முதல் நிலை வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸ் (29 வயது, 9வது ரேங்க்) மோதினர். அதில் எல்சா 2மணி 25 நிமிடங்கள் போராடி 4-6, 6-3, 6-4 என்ற செட்களில், நேரடியாக 2வது சுற்றில் களம் கண்ட எலிசை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
இன்னொரு ஆட்டத்தில் ஆண்டோரா வீராங்கனை விக்டோரியா ஜிமனஸ் (20 வயது, 123வது ரேங்க்) ஒரு மணி 31 நிமிடங்களில் ரஷ்யா வீராங்கனை வெரோனிகா குதெர்மேடோவாவை (28 வயது, 7வது ரேங்க்) 6-4, 6-2 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதிப் பெற்றார். மேலும், கொலம்பியாவின் எமிலியனா அரன்கோ (24 வயது), போலந்தின் மேக்தலீனா ஃபிரெச் (27 வயது) ஆகியோர் காலிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.