ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
பிரிட்ஜ்வாட்டர்: மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்து வருகிறார். இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அதிபர் பதிவிடுகையில், மெக்சிகோவில் இன்னும் போதை பொருள் கடத்தல் நடந்து கொண்டிருப்பது கவலையளிக்கிறது. இரு நாடுகளின் எல்லையை பாதுகாப்பதற்கு அந்த நாடு உதவி வருகிறது. இருந்தாலும் போதை பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மெக்சிகோ செய்தது போதாது. வட அமெரிக்கா முழுவதையும் போதை பொருள் கடத்தலின் விளையாட்டு மைதானமாக மாற்ற முயற்சிக்கும் குழுக்களை மெக்சிகோ இன்னும் நிறுத்தவில்லை.
ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து மெக்சிகோ பொருட்களுக்கும் 30 % வரி விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் விரக்தியை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.