மெக்சிகோ அழகியை முட்டாள் என விமர்சித்ததால் மிஸ் யூனிவர்ஸ் போட்டியை புறக்கணித்த அழகிகள்: அனைவரும் வெளிநடப்பு செய்தனர்
பாங்காக்: மிஸ்யூனிவர்ஸ் 2025ஆம் ஆண்டுக்கான அழகி போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடக்கிறது. இதில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த அழகிகள் பங்கேற்று உள்ளனர். ஒவ்வொரு கட்டமாக போட்டி நடந்து வருகிறது. அப்போது மிஸ் மெக்சிகோ நாட்டு அழகி படிமா போஷ் என்பவரை அழகி போட்டி நடத்தும் தாய்லாந்து நிர்வாகி நவத் இட்சராகிரிசில் திடீரென முட்டாள் என்று அழைத்தார். மேலும் இது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், அதிருப்தி அடைந்த மெக்சிகோ அழகி படிமா போஷ் கோபம் அடைந்தார். யார் முட்டாள் என்று கேட்டு வாக்குவாதம் செய்தார்.
மேலும்,’ நீங்கள் என்னை ஒரு பெண்ணாகவும், என் நாட்டின் பிரதிநிதியாகவும் மதிக்கவில்லை’ என்று கூறி போட்டி அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவருக்கு ஆதரவாக தற்போதைய மிஸ் யூனிவர்ஸ் விக்டோரியா கேஜேர் தெயில்விக் உட்பட அனைத்து போட்டியாளர்களும் எழுந்து வெளிநடப்பு செய்ததால் நிலைமை மோசமடைந்தது. இதை தொடர்ந்து போட்டி நிர்வாகி இட்சராகிரிசில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதையடுத்து நின்று போன மிஸ்யூனிவர்ஸ் போட்டியை மீண்டும் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
