மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 4வது நாளாக, நீர்வரத்து விநாடிக்கு 6,500 கனஅடியாக நீடித்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 6,083 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6,401 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 400 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 118.31 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 117.63 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 89.74 டிஎம்சியாக உள்ளது.
