*நிரந்தர தீர்வு காண விவசாயிகள், மக்கள் வலியுறுத்தல்
மேட்டூர் : மேட்டூர் அணையில் ஒரு பகுதியில் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறி மாசடைந்து உள்ளதால், மீனவர்கள், கிராம மக்கள் காவிரி நீரை பயன்படுத்த முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருக்கும் போது, நீர்தேக்கம் 60 சதுரமைல் அளவிற்கு பரந்து விரிந்து கடல்போல காட்சியளிக்கும். காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவையையும் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட 21 மாவட்டங்களின் குடிநீர் தேவையையும், பூர்த்தி செய்து வருவது மேட்டூர் அணை ஆகும்.
மின்வளம், மீன்வளம், நீர்வளம் என மூன்று வளங்களை கொண்ட மேட்டூர் நீர்தேக்கத்தில், காவிரி கரையெங்கும் பச்சை நிற படலங்கள் படர்ந்து, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் காவிரி நீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். குடியிருப்புகளில் வசிக்க முடியாத அளவிற்கு துர்வாடை வீசுகிறது.
வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் காவிரியில் படர்ந்த பச்சை நிற மாசு காரணமாக காவிரி நீரை பருக முடிவதில்லை. இதேபோல் காவிரியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களும், மீனவர் உதவியாளர்களும் காவிரியின் நடுவில் மீன் பிடித்தாலும் தாகத்தை போக்க காவிரி நீரை அள்ளிப்பருக முடியவில்லை.
மீன்பிடிக்க செல்லும் போதே கரையில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரையோ அல்லது பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரையோ வாங்கி செல்கின்றனர். காவிரியில் வலைவீசும் மீனவர்கள் கை, கால்களில் பச்சை நிற படலம் படிவதால், உடலில் ஆங்காங்கே அரிப்பு ஏற்படுகிறது. அதேபோல் பண்ணவாடி, கோட்டையூர், செட்டிபட்டி, யாமனூர், நாகமரை, ஓட்டனுர் ஆகிய பரிசல் துறைகளில் படகில் ஏறும் போதும், இறங்கும்போதும் பயணிகளின் கால்களில் பச்சை நிறம் படலம் படர்ந்து அரிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் சிலருக்கு புண் ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர் பகுதியில் உள்ள கழிவுநீர், மழைக்காலங்களில் காவிரி உபரிநீருடன் கலந்து வந்து இதுபோன்ற பச்சை நிற படலம் படர்ந்து துர்நாற்றம் வீசுவதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
நீர்வளத்துறை அதிகாரிகளோ, மேட்டூர் அணையில் நீர்மட்டம் சரியும் போதெல்லாம், காவிரி கரைகளில் விவசாயிகள் விவசாயம் செய்வதாகவும், பயிர்கள் வளரவும், நோய் பாதிப்பை தடுக்க பயன் படுத்தப்படும் உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்றவற்றால் நீர்மட்டம் உயரும் போது பயிர்களும், செடி கொடிகள் அழுகி ரசாயன மாற்றமடைந்து பாசிபோல படர்ந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக இப்பிரச்னை இருந்தாலும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நீர்வளத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகளும், மீனவர்களும் குற்றம் சாட்டுகின்றனர். எதனால் பச்சை நிற படலம் படர்கிறது என்பதை குழு அமைத்து, கண்டறிந்து அதனை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுப்பதே தீர்வாகும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேட்டூர் அணையில் நீர்திறப்பு 15 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 5வது நாளாக, நீர்வரத்து விநாடிக்கு 6,500 கனஅடியாக நீடித்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 6,401 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,455 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 10 மணி முதல் 15ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக, 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 117.63 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 116.9 அடியாக சரிந்தது. நீர்இருப்பு 88.68 டிஎம்சியாக உள்ளது.

