*அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் வேண்டுகோள்
தஞ்சாவூர் : மேட்டூர் அணை திறந்தும் வறண்டு கிடக்கிறது. மெலட்டூர் வடக்கு குளத்திற்கு தண்ணீர் நிரப்ப வேண்டும் என்றுஅதிகாரிகளுக்கு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் மெலட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு மாத காலமாகியும் இன்னும் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் குளங்கள் வறண்டு காட்சி அளிக்கிறது.
இதனால் குடிநீர் ஆதாரங்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெலட்டூர் அருகே உள்ள வடக்குகுளம், மேலக்குளம், கீழக்குளம், தெற்குளம், கரம்பைக்குளம், ஏர்வாடிகுளம், நரியனூர்குட்டை, காட்டுக்குறிச்சி பொதுகுளம், அத்து வானப்பட்டி குளம் உள்பட பல குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மெலட்டூர் சுற்று வட்டார பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
இருப்பினும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டு வெட்டாறு, வெண்ணாறுகளில் பாசனத்துக்கு போதுமான தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும் மெலட்டூர் பகுதியில் உள்ள கோமுட்டிகுளம் எனப்படும் வடக்கு குளத்துக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.
குளங்களுக்கு தண்ணீர் வரக்கூடிய நீர் வழிப்பாதைகளை அரசு சரிவர பராமரிக்காததால் நீர்வழிப்பாதைகள் பல இடங்களில் தூர்ந்து போய் தண்ணீர் செல்ல முடியாமல் தடைபட்டு குளங்களில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படவில்லை.
குளங்களில் தேங்கி இருந்த மழை நீரும் வெப்பம் காரணமாக வறண்டு விட்டது. இந்த ஆண்டு கோடை மழையும் சரிவர பெய்யவில்லை. இதனால் குளங்களில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து குளங்களில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.