மேட்டுப்பாளையம் அருகே ரேஷன் கடை ஜன்னலை உடைத்து அரிசி, பருப்பு சாப்பிட்ட யானை: மாஜி ஊராட்சி தலைவரின் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே ரேஷன் கடை ஜன்னலை உடைத்து அரிசி, பருப்புகளை சாப்பிட்ட யானை மாஜி ஊராட்சி தலைவரின் வீட்டிற்குள் புகுந்தும் அட்டகாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். கோவை மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய ஒற்றை யானை ஊமப்பாளையம் பகுதியில் முகாமிட்டது. தொடர்ந்து அங்கிருந்த ரேஷன் கடையின் ஜன்னல் கம்பிகளை அடித்து உடைத்து வளைத்து உள்ளே இருந்த ரேஷன் அரிசி மற்றும் பருப்பு மூட்டையை எடுத்து வெளியே வைத்து சாப்பிட்டுள்ளது. தொடர்ந்து அருகே இருந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகத்தின் வீட்டின் முன்பக்க கேட்டை உடைத்த ஒற்றை யானை உள்ளே புகுந்து அங்கிருந்த டூவீலரை அடித்து உடைத்து சேதப்படுத்தியது.
இதையறிந்த சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட ஒற்றை காட்டு யானையை நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பி வைத்தனர். இரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். இதனால் ஒற்றை காட்டு யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறாத வண்ணம் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.