Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவ விழா

*ஏராளமான பெண்கள் பங்கேற்பு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண உற்சவம் விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் சிறப்பு அபிஷேகமும்,அலங்கார பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டின் கந்த சஷ்டி விழா கடந்த 22 ம் தேதி காப்பு கட்டுதல் உடன் துவங்கியது. தொடர்ந்து, சுப்பிரமணியசாமிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடைபெற்று வந்தன.விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பல வண்ண மலர்களால் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அலங்காரம் நடந்தது. திருவிளக்கில் தீபம் ஏற்றுதல், மூலவர் முருகப்பெருமானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜைகள், விநாயகர் வழிபாடு, கலச பூஜை, யாகம் வளர்த்து தாரை வார்த்தல், மாலை மாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோயில் தலைமை அர்ச்சகர் தனசேகர் குருக்கள் தலைமையில் கண்ணன் குருக்கள், விஷ்ணுவேல், சிவம் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மணக்கோலத்தில் காட்சியளித்த சுப்பிரமணியரை வழிபட்டு அருளாசி பெற்றுச்சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.