Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மெட்ரோ ரயில் திட்டம்: ஒன்றிய அரசு நிராகரிப்பு ஏன்? நயினார் விளக்கம்

நெல்லை: நெல்லை வடக்கு மாவட்ட பாஜ அலுவலகத்தில் மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரிக்கவில்லை. அந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து விரிவாக அனுப்பக் கோரியுள்ளது. ஆனால் அந்தத் திட்டம் குறித்து தவறாக பரப்புரை செய்யப்படுகிறது. கோவைக்கு மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்ற முறையில் ஒன்றிய அரசுக்கு அளித்த அறிக்கை உள்ளது. கோவை ரயில் நிலையத்திற்கும், பஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரம் குறைவாக உள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கு குறைந்தபட்ச தூரம் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் திட்டத்தை நிராகரித்ததாக கூறி கோவை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. 2026ல் மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் ஏதும் கூறாமல் பின்னர் பார்க்கலாம் என மழுப்பலாக தெரிவித்தார்.

* மறுக்கப்பட்டது உண்மைதான்: பாஜ எம்எல்ஏ வானதி ஒப்புதல்

கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜ மாவட்ட தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்த தமிழக அரசு சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை முறையாக தயாரிக்காமல் ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். அதனால்தான் கோவைக்கு மெட்ரோ ரயில் மறுக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு வகையில் மெட்ரோ திட்டம் அமல்படுத்த பரிசீலிக்கப்படுகிறது. மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து சதவீதம் அடிப்படையில் தான் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படவில்லை. திட்ட அறிக்கை தயார் செய்யும் போது மக்கள் கருத்தை பெற்று, மக்கள் பிரதிநிதிகள் கருத்தை பெற்று திட்ட அறிக்கை உருவாக்காமல், நகர பகுதியில் உள்ள முக்கிய கடைகளை அகற்றும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் தொகை குறைவாக உள்ள பாஜ ஆளும் மாநிலங்களில் மெட்ரோ ரயில் வழங்கப்படுவதாக விமர்சிக்கப்படுகிறது. ஆக்ரா முக்கியமான சுற்றுலா தளம் என்பதால் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் அங்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பாட்னாவில் மெட்ரோ ரயில் திட்டம் முனிசிபாலிட்டி பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் வழங்கப்பட்டுள்ளது. கோவைக்கு மெட்ரோ திட்டத்தை உறுதியாக நாங்கள் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.