சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 5-ல் குறிஞ்சி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து கொளத்தூர் நிலையத்தை வந்தடைந்தது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் II-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கட்டம் 2 வழித்தடம் 5 மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை47 கி.மீ நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களும் (5.8 கி.மீ.), 39 உயர்மட்ட மெட்ரோஇரயில் நிலையங்களும் (41.2 கி.மீ) அமைக்கப்படவுள்ளது. 5.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை பிரிவுக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தபடுகின்றன.
கட்டம் 2 வழித்தடம் 5-இல் 5.8 கி.மீ நீளம் கொண்ட சுரங்கப்பாதை பிரிவு மற்றும் 2 சாய்வுப்பாதைகள் Tata Projects நிறுவனத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதற்கு JICA நிறுவனம் நிதியுதவி அளிக்கின்றது. வழித்தடம் 5-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை (Upline) 246 மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை 20.02.2025 அன்று தொடங்கி இன்று (21.08.2025) கொளத்தூர் நிலையத்தை வந்தடைந்தது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி 1.8 மீட்டர் மிகக் குறைந்த சுமை (extremely low overburden), 3.8% செங்குத்தான சாய்வு (a steep gradient) மற்றும் அதிக போக்குவரத்துக்கு உட்பட்ட உள்வட்டச் சாலையின் (IRR - Inner Ring Road) நடுவில் தரைப் பாதுகாப்புக்கான தேவை போன்ற அனைத்து சவால்களையும் கடந்து பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்துக்கோ எந்தவித இடையூறும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), இணை பொது மேலாளர் எம்.கார்த்திகேயன், Tata Projects நிறுவனத்தின் திட்ட இயக்குநர் கே.ரமேஷ், திட்ட மேலாளர் நத்தபோங் கட்கேவ், பொது ஆலோசகர் நிறுவனத்தின் குழுத் தலைவர் இயன் வாட்சன், தலைமை பொறியாளர் உஸ்மான் ஷெரிப், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Tata Projects நிறுவனம் மற்றும்பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.