பூவிருந்தமல்லி முதல் சுங்குவார்ச்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் அமைப்பதற்கான முதற்கட்ட பணிக்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு
சென்னை : பூவிருந்தமல்லி முதல் சுங்குவார்ச்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் அமைப்பதற்கான முதற்கட்ட பணிக்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பூவிருந்தவல்லி முதல் கடற்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வழித் தடத்தில் பூவிருந்தவல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்துதல், சாலை பணிகள், வடிவமைப்பு திட்டமிடல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
*சாலை மற்றும் பிற சிவில் பணிகள்: ரூ.252 கோடி செலவில் சாலை அமைப்பு, மரம் வெட்டுதல் மற்றும் மீண்டும் நடுதல், நில அளவை, போக்குவரத்து மேலாண்மை, அடிப்படை உள்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
*நிலம் கைப்பற்றுதல் மற்றும் கட்டமைப்பு செலவுகள்: மிகப்பெரிய பகுதியான ரூ.1,836 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
*சுற்றுச்சூழல் மற்றும் குடிசைப்பகுதி மறுசீரமைப்பு: ரூ.16 கோடி.
*வடிவமைப்பு செலவுகள் மற்றும் பொது செலவுகள்: ரூ.13.40 கோடி.
*இதர செலவுகள் : ரூ.8.44 கோடி.
*இதனால் மொத்தமாக ரூ.2,125.84 கோடி தேவைப்பட்டு, அதை சுருக்கமாக ரூ.2,126 கோடியாக அரசு அறிவித்துள்ளது.
*இந்த ஒதுக்கீடு, மத்திய அரசின் ஒப்புதலை முன்கூட்டியே கருதி செய்யப்பட்டதாகவும், பணிகள் தாமதமின்றி தொடங்கப்பட வேண்டும் என்பதே நோக்கமாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான நிதி, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்துக்கு துணை கடனாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.