Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ வழித்தடம் விரிவாக்க பணிக்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டப் பணிகளுக்கு முதற்கட்டமாக, ரூ.2126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மெட்ரோ ரயில்கள் விரைவான சேவைகளையும் வழங்கி வருகிறது. சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் 118.9 கிமீ தொலைவுக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிமீ தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரையில் 26.1 கிமீ தொலைவிற்கும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் 47 கிமீ தொலைவில் என 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையில் 21.76 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்பட்டது. இதேபோல, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனையுடன் முடியும் திட்டத்தில், பரந்தூர் வரையில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து வழித்தடம் நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. தமிழக அரசின் ஒப்புதலை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவனம் இறங்கியது.

பூந்தமல்லி மெட்ரோ பகுதியில் இருந்து தொடங்கி செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காடுக்கோட்டை, பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்துர் விமான நிலையம் வரை செல்லும் வகையில் 4வது வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இது, தோராயமாக 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக, திட்ட செலவு ரூ.15,906 கோடி நிதி செலவாகும் என கணிக்கப்பட்டது.

பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை சுமார் 28 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் தடம் அமைய உள்ளது. இடைப்பட்ட தூரத்தில் 14 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக மதிப்பு ரூ. 8,779 செலவாகும் என திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், முதற்கட்டமாக மெட்ரோ பணிகளுக்கான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.2126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.