சென்னை : கிரின்வேஸ் சாலையில் இருந்து மந்தைவெளி வரை 775 மீட்டருக்கு சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை :
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் வைகை என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் கிரீன்வேஸ் சாலை மற்றும் மந்தைவெளி நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் பிப்ரவரி 2024-இல் தொடங்கப்பட்டன. இந்த சுரங்கப்பாதை பணிகளுக்காக "நொய்யல்" மற்றும் "வைகை" என்று பெயரிடப்பட்ட இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. "வைகை" சுரங்கம் தோண்டும் இயந்திரம், பிப்ரவரி 2024-இல் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து 775 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கி, இன்று, அக்டோபர் 18, 2025 சுரங்கம் அமைக்கும் பணியைமுடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. இந்தச் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை லார்சன் & டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் திரு.டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு),பொது மேலாளர்கள் திரு. ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி (சுரங்கப்பாதை கட்டுமானம்), திரு. சி.செல்வம்(வழித்தடம்), CRE ஆலோசகர் திரு.சஞ்சீவ் மண்டல், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர்திரு. ஜெயராம், திட்ட மேலாளர் திரு.அஹ்மத், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், லார்சன் & டூப்ரோநிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்றது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் 75 கட்டிடங்களுக்கு கீழே சென்றது. இந்தக் கட்டிடங்களுக்கும், சுரங்கப்பாதைக்கும் இடையேயுள்ள மண் அடுக்கு 9 மீட்டரிலிருந்து 12 மீட்டர் வரை இருந்தது. மந்தைவெளி பகுதியில் ஏற்கனவேபல முக்கியமான அடிப்படை வசதிக் கட்டமைப்புகள் — அதாவது, கழிவுநீர் குழாய்கள், குடிநீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் ஆகியன இருந்தன. இதன் காரணமாக, சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு கூடுதல்கால அவகாசம் தேவைப்பட்டது.
வைகை சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெரும்பாலும் வண்டல் மண் / மணல் நிறைந்த நிலப்பரப்பைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. வைகை சுரங்கம் தோண்டும் இயந்திரத்தில் மொத்தம் 13 முறை அதன் வெட்டும் முகப்பில் (cutterhead interventions) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சுரங்கம் அமைக்கும் பணியை முடிக்க 610 நாட்கள் தேவைப்பட்டது.
இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் நொய்யல், மந்தைவெளி நிலையத்தை அடுத்தமாதத்தில் வந்தடையும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இந்த மாதத்தில் மட்டும் ஏற்கனவே மூன்று இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை நிறைவு செய்துள்ளது. முதலில் ஆர்.கே.சாலையில். அடுத்து கோடம்பாக்கத்தில் மற்றும் இன்று மந்தைவெளியில். வரும் மாதங்களிலும் இதுபோல் பல சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளன.