சென்னை: சென்னையில் நேற்று நடந்த ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் ஜெர்மனி அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 14வது ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் கடந்த நவம்பர் 28ம் தேதி முதல், சென்னை, மதுரை நகரங்களில் நடந்தன. சென்னையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி - ஸ்பெயின் அணிகள் மோதின. போட்டியின் 26வது நிமிடத்தில் ஜெர்மனியும், 33வது நிமிடத்தில் ஸ்பெயினும் தலா ஒரு கோல் போட்டனர். அதன் பின் கடைசி வரை கோல் விழாததால் ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
அதில், 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக, 7 மற்றும் 8வது இடங்களுக்காக நடந்த போட்டியில், பிரான்ஸ் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி 7ம் இடத்தை பிடித்தது. பின், 5 மற்றும் 6ம் இடங்களுக்காக நடந்த போட்டியில் மோதிய பெல்ஜியம்-நெதர்லாந்து அணிகள் தலா 3 கோல்கள் போட்டதால் ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில், பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 5ம் இடத்தையும், தோற்ற நெதர்லாந்து 6ம் இடத்தையும் பிடித்தன.
10 நிமிடத்தில் 4 கோல்: வென்றது இந்தியா
சென்னையில் நேற்று நடந்த ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப்போட்டியில், இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதின. போட்டி துவங்கி 3வது நிமிடத்திலும், 2வது பாதியில் 44வது நிமிடத்திலும் அர்ஜென்டினா 2 கோல்கள் போட்டு முன்னிலை வகித்தது. அதன் பின், இந்திய அணி வீரர்கள் எழுச்சியுடன் ஆடத் துவங்கினர். 49வது நிமிடத்தில் பால் அங்கிட், 52வது நிமிடத்தில் மன்மீத் சிங், 57வது நிமிடத்தில் ஷர்துல் திவாரி, 58வது நிமிடத்தில் அன்மோல் எக்கா, என அடுத்தடுத்து, 10 நிமிட இடைவெளியில் 4 கோல்கள் போட்டு அசத்தினர். அதனால், 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா அதிரடியாக வென்று 3ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றது


