இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதிலும் பணிபுரியும் பெண்களுக்கு வீடு, பணியிடம் என்று இரட்டை சிக்கல்கள். மாதவிடாய் காலங்கள், மாதவிடாய் நின்ற பிறகு அல்லது நிற்கும் தருவாவில் மன அழுத்தம் இயல்பாகவே அதிகரிக்கும். அதற்கான காரணம் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள். ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் ஏற்ற இறக்கமான நிலையும், அவ்வப்போது குறைந்து கூடி வருவதும் பெண்ணின் மன மற்றும் உணர்வுகளில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள்:
இதன் விளைவாக பெண்களுக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. எரிச்சல், சோகம், கோபம் போன்றவற்றை உடன் இருக்கும் குடும்பத்தார் மீதும் வெளி உலகத்திலும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். சிறிய விஷயங்களுக்குக் கூட பதற்றம் அதிகரிக்கிறது. எதைப்பற்றியாவது கவலையும் எப்போதும் மனதில் அமைதியின்மையும் இருக்கும். சில பெண்களுக்கு பதற்றத்தில் இருந்து பீதி அடையும் நிலை வரையில் நிலைமைகள் மோசமாகலாம். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கோபத்தில் கத்துவார்கள்.உற்சாகமான மனநிலை இல்லாததால் மனதில் சோர்வும் நம்பிக்கை யின்மையும் உண்டாகும். செய்யும் வேலையில் கவனம் இல்லாமல் போவது அடிக்கடி மறதி ஏற்படுவது மற்றும் நினைவாற்றல் குறைபாடுகளும் உண்டாகும். இதனால் வெறுமையும் வெறுப்பும் அதிகரிக்கும். ஒருவேளை மன அழுத்தங்கள், சோர்வுகள் இல்லாமல் இருப்பின் அதீத சந்தோஷமும், தாம்பத்தியம் அல்லது காதல், காம உணர்வு அதிகமாக இருக்கும்.
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எக்கச்சக்கமாக வியர்க்கும், குறிப்பாக இரவு நேர தூக்கத்தின் போது வியர்வை வெளியேறுவதால் தூங்க முடியாமல் தொந்தரவுகள் உண்டாகும். இதனாலும் மனப் பதற்றமும் அதிகரிக்கும். வளர்சிதை மாற்றத்தின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். இதனால் உடல் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்களும் பெண்களின் மன அழுத்தத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது. அடிக்கடி தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி ஏற்படும். தசைவலி மூட்டு வலி போன்றவையும் படுத்தியெடுக்கும்.
மனநிலை மாற்றங்களும், விளைவுகளும்
பொதுவாக மெனோபாஸ் காலகட்டத்தில் தான் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி, அதனால் மருமகன்,மருமகள், சம்பந்தி போன்ற புது உறவுகள் உண்டாகும். அதனால் விளையும் பிரச்னைகள், அதிகரித்த வேலைகள் போன்றவற்றை சமாளிக்க நேரிடும். அதே போல எழுபது எண்பது வயதில் இருக்கும் வயதான பெற்றோரையும் பராமரிக்கும் சுமையும் பெண்களுக்கு ஏற்படும். உடல் ரீதியான துன்பங்களுடன் மனரீதியான மாறுபாடுகளுடன் அதிகரித்த வேலைப் பொறுப்புகள் போன்றவற்றின் காரணமாக அதிகமான மன அழுத்தத்திற்கு பெண்கள் ஆளாகிறார்கள். இதனால் கடுகடுவென்று பேசுவது, இரைந்து கத்துவது போன்ற செயல்களால் வீட்டில் உள்ளவர்கள் இத்தனை நாட்களாக நன்றாக இருந்த பெண் ஏன் இப்படி மாறிப் போனாள் என்று ஆச்சரியப்படுவதும் நடக்கிறது.
மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான எளிய தீர்வுகள்
முதன்மையானதும் முக்கியமானதும் ஆன தீர்வு ஆழ்ந்த உறக்கம் தான். எல்லா நாட்களும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு சென்று காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். ஆறிலிருந்து ஏழு மணி நேர ஆழ்ந்த உறக்கம் மிக மிக அவசியம். படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டி.வி, அலைபேசி, கணினி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் உறங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, புத்தகத்தை வாசிப்பது, கை கால்களை நீட்டி மென்மையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். படுக்கை அறை குளிர்ச்சியாக இருக்க வேண்டும். லேசான ஆடைகளை அணிய வேண்டும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும் போது அது என்டார்ஃபின்களை வெளியிடுகிறது. மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கார்திசால் என்கிற ஹார்மோன் மன அழுத்தத்தைக் குறைத்து, தூக்கத்தை மேம்படுத்துகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஒல்லியான புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் காஃபின் உள்ள டீ, காபி போன்றவற்றை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். காரமான உணவுகள், சூடான பானங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். அவை உடல் வெப்பத்தை உயர்த்தி, வியர்வையை அதிகரிக்கச் செய்யும். நாள் முழுவதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். விட்டமின் டி மற்றும் கால்சியம் இரண்டும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை. இவை ஈஸ்ட்ரோஜன் குறைவதால் பாதிக்கப்படலாம். தினமும் சூரிய ஒளி உடலில் மீது படுமாறு தினமும் 20 நிமிடங்களாக நடக்க வேண்டும். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சில நிமிடங்கள் தியானம் செய்யலாம்.
வீட்டில் இருப்பவர்களுடன் மனம் விட்டு பேசலாம். நண்பர்கள், நெருங்கி உறவினர்களுடன் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் போது மனச்சுமை குறைகிறது. உணர்ச்சி நல்வாழ்விற்கு சமூகத் தொடர்பு மிக முக்கியமானது. நாள் முழுவதும் வேலை செய்து கொண்டே இருக்காமல் அவ்வப்போது குறுகிய இடைவெளிகள் எடுத்துக்கொண்டு பத்து நிமிடமாக தூங்கி எழுந்திருப்பது உடலை மனதையும் சுறுசுறுப்பாக வைக்க உதவும்.ஏதாவது வகுப்புகளில் சேர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். நடனம், பாட்டு, ஆன்லைன் வகுப்புகள், இசை, கைவேலைகள், என பிடித்த வகுப்புகளில் சேர்ந்து கற்றுக் கொள்ளும் போது மூளை புத்துணர்ச்சி அடைகிறது. இதனால் மனமும் உற்சாகம் அடைந்து சோர்வு விலகிப் போகிறது.
- அம்ருதா