பெண்களுக்கு ஆண்களை விட சுமார் 20 நிமிடங்கள் அதிகம் தூக்கம் தேவை என்கிறது சமீபத்திய உலக நரம்பியல் வல்லுனர்களின் மருத்துவ ஆய்வு முடிவு. இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது www. sleepfoundation. org இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் ஏராளம். பொதுவாகவே பெண்கள் தங்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு 10 வருடங்களுக்குப் பிறகும் உடலாலும், மனதாலும், சமூகத்தாலும் பல மாற்றங்களையும், பார்வைகளையும் எதிர்கொள்பவர்கள். 10 வயதில் உடல் வளர்சிதை மாற்றம், 20 வயதில் திருமணத்துக்கான மனநிலை, 30 வயதில் கால்சியம், ஹார்மோன் மாற்றங்கள் என உடல், மன ரீதியாக ஆண்கள் எதிர்கொள்ளும் சூழலைக் காட்டிலும் பெண்கள் சந்திப்பது மூன்று மடங்கு அதிகம் என்கிறது அந்த ஆய்வறிக்கை. எதனால் அதிக தூக்கம் தேவை?
மல்டிடாஸ்கிங்
பெண்கள் இயல்பாகவே ‘ ‘மல்டிடாஸ்கிங்’’ அதிகமாகச் செய்கின்றனர். அதாவது வீட்டுப் பொறுப்புகள், வேலை, பிள்ளைகள், குடும்ப உறவுகள் என்று பல பொறுப்புகளை ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டியிருப்பதால் உடலும், மூளையும் அதிகமாக உழைக்கும் நிலை இருக்கும். மூளை அதிகம் உழைத்துவிட்டால், அதற்குத் தேவையான ஓய்வும் அதிகமாகவே தேவைப்படும். அதனால்தான் கூடுதல் தூக்கம் அவசியமாகிறது.
மூளைச் செயல்பாட்டில் வித்தியாசங்கள்
ஆண்களுக்கும், பெண்களுக்கும் மூளையின் கட்டமைப்பும் செயல்பாடும் ஒத்துப்போவதில்லை. பெண்களின் முன்பக்க மூளைப்பகுதி (prefrontal cortex), முடிவெடுக்கும், யோசனை செய்யும்
பகுதிகள். இவை ஆண்களை விட பெண்களில் சற்றே அதிகமாக செயல்படக் கூடியவை. இதுவும் அதிக வேலைப்பளு தருவதால், தூக்கத்தின் அவசியத்தைக் கூட்டுகிறது.
கர்ப்பம், மாதவிடாய், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள்
பெண்கள் வாழ்வில் அவர்களுக்கான வாழ்வியல் இடமே மாறுபடும் என்பதால் அது சார்ந்த மனநிலை மாற்றங்களும் ஏற்படும். குறைந்தது 23 வயது வரை பெற்றோர் வீடு, அதன் பிறகு புகுந்த வீடு. அங்கே தனக்கான சூழல் என்ன எனத் தெரிந்துகொள்ளவே பலவிதமாக மூளை போராடும். ஹார்மோன்கள் அலைக்கழிக்கப் படும். எது நம் வீடு என்கிற போராட்டத்திலேயே இன்னொரு பத்து வருடங்கள் கடக்கும். இதற்கிடையில் ஹார்மோன்கள் இயல்பாகவே மாதவிடாய், கர்ப்பம், மெனோபாஸ், என ஏற்ற இறக்கங்களை சந்திக்கும். இவை எல்லாமே தூக்கத்தை பாதிக்கக்கூடியவைதான். இதனால் தூக்கத்தின் தரம் குறையலாம். இது கூடுதல் தூக்கத்திற்கான தேவையாக மாறுகிறது.
தூக்கத்தின் தரம் குறைவதற்கான காரணிகள்
அதிக மன அழுத்தம், இரவு நேரக் குடும்பக் கவலை, குழந்தை வளர்ப்பு, போன்றவை தூக்கத்தின் தொடர்ச்சியையும், ஆழத்தையும் பாதிக்கும். எனவே குறைந்த தரமான தூக்கத்தை சமநிலைப்படுத்த, அவர்களுக்கு அதிக நேரம் தூங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதிலும் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இரண்டு குழந்தைகள் எனில் வாழ்நாளில் ஆறு வருடங்கள் குழந்தையின் தாய்ப்பால், அவர்களின் மீதான இரவுநேர அக்கறை காரணமாகவே பெண்களின் தூக்கம் பாதிக்கப்படும்.
மருத்துவ முறைகள்
பெண்கள் தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் உடனே எதிர்வினை கொடுக்கிறவர்களாகவும் சில நேரங்களில் எமோஷனல் இடியட் என்கிற கட்டுக்குள்ளும் காட்சிப்படுத்தப்படுவதும் கூட அவர்களை மன அழுத்தத்திற்கு ஆட்படுத்தும். தூக்கம்தான் எல்லா வகையான அழுத்தத்தையும் குறைக்கும் ஒரே இயற்கையான வழி.
*பெண்கள், ஆண்களை விட 40% அதிகமாகத்தூக்கமின்மை (insomnia)-பிரச்னையில் இருப்பதாகவும் இந்தஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. *Restless Legs Syndrome பிரச்னையால் மூன்றில் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். அதாவது அவர்களுக்கே தெரியாமல் தூக்கத்தில் அசையும் கால்கள், சதைப் பிடிப்பு, அரிப்பு, எரிச்சல், கால்களில் வலி அல்லது மரத்துப்போதல் பிரச்னைகளால் தூக்கம் இழக்கின்றனர்.
*நாள்பட்ட வலியால் தூக்கம் குறைவதாலும் பெண்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் - இது மாதவிடாய், கர்ப்பம் போன்ற காரணங்களால் அதிகமாக ஏற்படுகிறது. இப்போது இருக்கும் மருத்துவ முறைகள் அத்தனையும் ஆண்களின் உடல் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே. ஆண் - பெண் உடல்கூறு அடிப் படையில் மருத்துவத்துறை செயல்படத் தொடங்கினால்தான் பெண்களுக்கான மருத்துவம் முழுமையாகக் கிடைக்கும். தூக்கம் மேம்பட தீர்வுகள் பெண்கள் சீரான, ஆழமான தூக்கத்தைப் பெற தினசரி வாழ்க்கையில் சில பழக்கங்களை மாற்றி அமைக்கவேண்டும். தூக்கத்திற்கு இடையூறான உடல் எடை, மன அழுத்தம், ஹார்மோன்கள், வேலைப்பளு, கணினி/மொபைல் பயன்பாடு இவை கட்டுப்படுத்தப்பட்டால் தூக்கம் இயற்கையாக மேம்படும். தினமும் ஒரே நேரத்தில் படுக்கவும், ஒரே நேரத்தில் எழுவதையும் பின்பற்ற வேண்டும். வார இறுதியானாலும் இந்த தூக்க நேரத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். இது உடலின் உயிரியல் நேரத்தை (biological clock) ஒழுங்குபடுத்தும். தூங்குவதற்கு 1 மணி நேரம் முன்பிருந்தே மொபைல், லேப்டாப், டிவி போன்ற நீல ஒளி (blue light) தரும் எலக்ட்ரானிக் கருவிகள் பயன்பாட்டைத் தவிர்க்கவும். இந்த ஒளி, தூக்கஹார்மோன் மெலட்டோனின் உற்பத்தியைத் தடை செய்கிறது.
காபி, டீ, சாக்லேட், காரசாரமான உணவுகள் தூக்கத்தைக் குறைக்கும். மாறாக, மஞ்சள் கலந்த பால், சாமந்தி டீ போன்றவை தூங்குவதற்கு முன் எடுத்துக்கொள்ள நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தினமும் தியானம், யோகா, நடைப்பயிற்சி செய்வது மனதை நிதானமாக்கும். சுடுநீர் குளியல், விருப்பமான இசை, நறுமண எண்ணெய் மசாஜ் போன்றவை மனதை லேசாக்கும். முடிந்தால் மறுநாளுக்கான செயல்களை (To-do list) எழுதிவிட்டு தூங்கச் செல்லுங்கள். அது நாளை பற்றிய சிந்தனையைத் தூண்டி தொந்தரவு செய்யாமல் மனதை அமைதியாக வைத்திருக்கும். நேர்மறை எண்ணங்கள் கொடுக்கும் புத்தகம் வாசிக்கலாம், கவிதை, கதை எழுதலாம். ஒலி, ஒளி குறைவாகவும், குளிர்ச்சியான சூழலாகவும் படுக்கயஅறையை வைத்திருக்கவும். படுக்கை மற்றும் மெத்தை தூய்மையாக இருப்பதும் அவசியம். மாதவிடாய், மெனோபாஸ் காலங்களில் தகுந்த சானிட்டரி பேட்கள் பயன்படுத்தவும். முடிந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறவும். ஏனெனில் மாதத்தில் குறைந்தது மூன்று நாட்கள் தூக்கமின்மை என்பது வருடத்திற்கு 32 நாட்கள். நமக்கான ‘‘மீ டைம்’’ நாம் எடுத்துக்கொண்டாலே தூக்கம் சீராகும்.
- ஷாலினி நியூட்டன்.