நினைவு நாளை முன்னிட்டு பாரதியாரின் கையெழுத்து பிரதிகள் தமிழ் மின்நூலகத்தில் பதிவேற்றம்: தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை கொண்டிருந்த தமிழ் மின் நூலகம் அண்மையில் தகவல் தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. உள்ளடக்கங்களில் ஒளிப்படங்கள், ஒலித் தொகுப்புகள், காணொலிகள், நிலவரைபடங்கள், தொல்லியல் தொடர்பான தகவல்கள் ஆகியவையும் புதிதாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு பல்லூடகப் பயன்பாட்டுப் பெட்டகமாக மின் நூலகம் உருமாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த மகாகவி பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன.
அந்த கையெழுத்துப் பிரதிகள் மின் நூலகத்தில் ஒரு தனித் தொகுப்பாகப் பதிவேற்றம் பெற்றுள்ளன. பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் மின் பதிப்பாக்கம் செய்யப்பட்டு பதிவேற்றம் பெற்றதில் பங்குவகித்த ஆய்வாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். பாரதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள தமிழ்த் துறை, வரலாற்றுத் துறை ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய தொகுப்பு இது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.