விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.500 கோடி மதிப்பில் ஏஐ-171 நினைவு அறக்கட்டளை: டாடா குழுமம் தகவல்
புதுடெல்லி: குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான 787-8 டீரிம்லைனர் விமானம் லண்டனின் கேட்விக் நகருக்கு புறப்பட்டது. விமானம் மேலே பறக்க தொடங்கிய 30 நொடிகளிலேயே விமான நிலையம் அருகிலிருந்து மருத்துவ கல்லூரி கட்டிடம் மீது விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உள்பட மொத்தம் 260 பேர் பலியாகினர். இந்நிலையில் ரூ.500 கோடி மதிப்பில் ஏஐ-171 நினைவு மற்றும் நல அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாடா குழுமம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு உள்பட தொண்டு நோக்கங்களுக்காக டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்டஸ் ஆகியவை அறக்கட்டளைக்கு வழங்க உறுதி அளித்துள்ளன. மேலும் விபத்தில் சேதமடைந்த பி.ஜே.மருத்துவக்கல்லூரி விடுதியின் உள்கட்டமைப்பை புனரமைப்பதும் இந்த அறக்கட்டளை நடவடிக்கைகளில் அடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.