சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று வினா - விடை நேரத்தின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி. பிரின்ஸ், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம் அவர்கள் : பேரவைத் தலைவர் அவர்களே, சீர்காழி தொகுதியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நாங்கூர் பெருமாள் கோயிலிலில் திருமணக்கூடம் அமைக்க அரசு ஆவனசெய்யுமா ?
அமைச்சர் அவர்கள் : பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கோரிய அருள்மிகு நாங்கூர் பெருமாள் கோயிலில் புதிய திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான வழக்கு மாண்பமை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வருகின்ற நவம்பர் 19 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மாண்பமை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு கிடைக்கப் பெற்றவுடன் அந்த திருமண மண்டபத்தினை கட்டுவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அனுமதியை பெற்று, உறுப்பினர் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அது எப்போது முடிவடையும் என தெரியவில்லை. எனது சீர்காழி தொகுதிக்குட்பட்ட நாங்கூர் அருள்மிகு நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் சுவாமி வீதியுலா வருவதற்கு சப்பரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சப்பரம் தற்போது பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளதால் அதற்கு பதிலாக புதிய திருத்தேர் ஒன்றினை அமைத்து தருவாரா என்றும், திருமயிலாடி அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குளம் நீண்டகாலமாக தூர் வாரப்படாமல் உள்ளதை தூர் வாரிக் கொடுத்து, அதற்கு தடுப்புச் சுவர் அமைத்து தர முன்வருவாரா என தங்கள் மூலம் கேட்டு அமைகிறேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கோரிய நாங்கூர் அருள்மிகு நாராயணப் பெருமாள் திருக்கோயிலின் சப்பரம் பழுதாகி உள்ளது உண்மைதான். உடனடியாக அந்த சப்பரத்தை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். திருக்தேர் வீதி உலா வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, இருப்பின் உறுப்பினர் அவர்கள் கோரிய திருத்தேரும் செய்து தரப்படும். அதுபோல திருமயிலாடி அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குளமானது ஒரு ஏக்கர் 27 சென்ட் பரப்பளவில் அமைந்துந்துள்ளது. அந்த குளத்தை தூர்வாரி, தடுப்புச் சுவர் கட்டும் பணி இந்தாண்டு எடுத்துக் கொள்ளப்பட்டு, 6 மாத காலத்திற்குள் முடித்து தரப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, திருப்புங்கூர் அருள்மிகு சிவலோகநாதர் ஆலயத்தில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. எப்போது குடமுழுக்கு நடத்தப்படும் என மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டு அமைகிறேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, இந்த மன்றத்திற்கு சொல்லவேண்டிய ஒரு தகவல். ஆயிரம் ஆண்டு திருக்கோயில்கள் என்பது மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பொக்கிஷங்கள் ஆகும். அந்த திருக்கோயில்கள் புனரமைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து எந்த காலத்திலும் ஏற்படாத ஒரு எண்ணம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிந்தையில் உதித்திட்டதன் காரணமாக ஆண்டிற்கு ரூ. 100 கோடி வீதம் இதுவரை ரூ. 425 கோடி ரூபாயினை அரசின் சார்பில் நிதியாக வழங்கினார்கள். இத்துடன் கூடுதலாக உபயதாரர் நிதி, பொதுநல நிதி மற்றும் திருகோயில் நிதி சேர்த்து ரூ. 571.55 கோடி மதிப்பீட்டில் சுமார் 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 71 திருக்கோயில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதர ஆயிரம் ஆண்டு திருக்கோயில்களின் பணிகளை விரைவுபடுத்தி குடமுழுக்கை முடித்து ஒரு வரலாற்று பெருமையை படைத்து இந்த மாமன்றத்தில் தெரிவிப்போம். உறுப்பினர் அவர்கள் கோரிய அந்த திருக்கோயிலின் திருப்பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. வரும் ஜனவரி மாத இறுதியில் அந்த திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெறும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி. பிரின்ஸ் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, எனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரணியல் கிராமம், வேணுகோபால கிருஷ்ணன் கோயில், தலக்குளம் கிராமம் பெருமாள் கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் ஆயிரம் ஆண்டுகளை தாண்டியிருக்கிறது. இங்கு வழிபடக் கூடிய மக்கள் கோயில் பராமரிக்கப்படாமல் உள்ளது என்றும், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முயற்சிக்கிறார்கள். அதற்கு அமைச்சர் அவர்கள் அந்த பணிகளை செய்திட முன்வருவாரா என தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, இந்த அவையின் கவனத்திற்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். கடந்த காலங்களில் திருப்பணி என்பது, ஒரு 15 ஆண்டுகாலத்தை சீர்தூக்கி பார்த்தால் குறைவான அளவிற்குதான் உபயதாரர்கள் நிதியின் வாயிலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆட்சியின் நான்கரை ஆண்டு காலத்தில் ரூ.1,520 கோடியினை உபயதாரர்கள் நிதியாக தந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் உபயதாரர்களின் நேர்த்திக் கடனையும், அவர்கள் விரும்புகின்ற பணிகளை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதற்கு இந்த அரசிடம் கோரிக்கை வைத்தவுடன் உடனடியாக அதற்கு அனுமதி தருவதோடு மட்டுமல்லாமல், உபயதாரர்களையே அந்த திருப்பணிகளை செய்வதற்கு அனுமதி அளித்ததன் விளைவாக ரூ.1,520 கோடி அளவிற்கு உபயதாரர் நிதி வரப்பெற்றிருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூறிய உபயதாரர் நிதி உடனடியாக திருக்கோயில் வசம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த பணிகளை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்பதனை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரி பெருமாள் கோவில் இடம், ஒக்கியம் துரைப்பாக்கம் உத்தண்டி போன்ற ஓஎம்ஆர், ஈசிஆர் ஒட்டிய பகுதிகளில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் அதிநவீன திருமண மண்டபங்கள் கட்டித் தந்து ஏழை, எளிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றித் தர அரசு முன்வருமா என தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, திருமண மண்டபங்களை பக்தர்களின் நேர்த்திக் கடனுக்காவும், இந்துகளின் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதற்காகவும், அதே நேரத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் பயன்படுத்துகின்ற வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 82 திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்திருந்தார்கள். நல்ல மனம் கொண்டோர் சிலர் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு தீட்டுகின்ற திட்டங்களால் அந்த திருமண மண்டபங்களை கட்டுவதற்கு தடையாணை வழங்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக சட்டப்போராட்டம் நடத்தி, மாண்பமை உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் வென்று, உறுப்பினர் அவர்கள் கோருகின்ற திருமண மண்டபங்களை கட்டித் தருவதற்கான முயற்சிகளை இந்த ஆட்சி எடுக்கும் என்பதனை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு பேரவைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, ஆதிதிராவிட மக்கள் வசிக்கின்ற பகுதியிலுள்ள திருக்கோயில்களை சீரமைப்பதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இரண்டரை இலட்சத்தை மூன்று இலட்சமாக உயர்த்தி தரப்படும் என கடந்த முறை நான் பேசிய போது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவாதத்தை தந்தார்கள். நான் கேட்க விரும்புவதெல்லாம் கட்டுமானங்களுக்கான செலவினங்கள் கூடுகின்ற வேளையில் அந்த செலவினங்களை அடிப்படையாக கொண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா என கேட்டு, அமைச்சர் அவர்கள் பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் திருக்கோயிலையும், பூலாங்குளம் உச்சிமாகாளியம்மன் கோயிலையும் பார்த்து சென்றீர்கள். அந்த திருக்கோயில்களுக்கான நிதியும் இந்தாண்டு உயர்த்தப்படுமா என தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, பாப்பான்குளம் அருள்மிகு கருத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பூலாங்குளம் உச்சிமாகாளியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில்களாக இருந்தாலும் உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 2.70 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உறுப்பினர் அவர்கள் கோரிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதி திருக்கோயில்களை பொறுத்தளவில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, திருக்கோயில்களின் திருப்பணிகளில் ஒரு அமைதிப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும். கடந்த ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் பகுதி மக்கள் வாழும் பகுதி திருக்கோயில்கள் மற்றும் கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிக்கு ஆண்டிற்கு தலா 1000 திருக்கோயில்கள் என எடுத்து கொள்ளப்பட்டு நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக 4 திருக்கோயில்களுக்குதான் திருப்பணி நடைபெற்றிருக்கிறது.
முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், 1000 ஆதிதிராவிடர் பகுதி மக்கள் வாழும் பகுதி திருக்கோயில்கள் மற்றும் 1000 கிராமப்புறத் திருக்கோயில்களின் எண்ணிக்கை தலா 1,250 ஆக உயர்த்தியதோடு, திருப்பணி நிதியுதவி ரூ. 2 இலட்சமாக உயர்த்தப்பட்டது, முதல் ஆண்டிலேயே 2,500 திருக்கோயில்களுக்கான நிதியுதவியையும் ஒரே இடத்தில் மாபெரும் விழாவினை நடத்தி வழங்கிய பெருமை நமது முதலமைச்சர் அவர்களை சாரும். அதன் பின்னர் நிதியுதவித் தொகை 2 இலட்சம் ரூபாய் தற்போது இரண்டரை இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 10,000 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை தெரிவித்து இந்த அவையின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்த சரித்திர சாதனை எந்த காலக்கட்டத்திலும் நடைபெற்றதில்லை. இந்த 4 ஆண்டுகளில் இப்படிப்பட்ட ஒரு அமைதியான திருப்பணி புரட்சி நடத்திய ஆட்சியை ஆன்மிக ஆட்சி என ஆன்மிகவாதிகள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர் என்பதனை பேரவைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.