நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஆற்றிய பணி தொடர்பாக அறிக்கை தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
திமுகவில் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் பல்வேறு அறிவுரை வழங்கினார். குறிப்பாக அரசு செயல்படுத்திவரக்கூடிய திட்டங்கள் தொடர்பாக செயல்படுவதுடன் மாவட்ட ஆட்சியருடன் அந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து கேட்டறிய வேண்டும் என வலியுறுத்தினார்.
அதிலும் குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிரை சேர்க்க கூடிய வகையில் முகாம்கள் நடைபெற்றுவருகிறது. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தகுதியான மகளிருக்கு உரிமைதொகை கிடைப்பதை உறுதிபடுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மேலும் 2024-ம் ஆண்டு தேர்தலை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. அதற்கு அரும்பாடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களை சந்தித்து தேவைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் பெருமக்களுடன் மண்டல பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார்.