Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேலூர் அருகே பயங்கரம் வாலிபர் மீது டிபன்பாக்ஸ் குண்டு வீசி சரமாரி வெட்டு: 2 பேர் கைது

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (32). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையத்தேவன், மைக்கேல், அசோக், கார்த்தி உள்ளிட்டோருக்கும், அப்பகுதியில் நடந்த வீரகாளியம்மன் கோயில் திருவிழாவின் போது முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், நவீன்குமார் தனது காரில், கீழவளவு பஸ் ஸ்டாப் அருகே நேற்றுமுன்தினம் இரவு நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வெள்ளையத்தேவன், அசோக், கார்த்தி உள்ளிட்ட சிலர் டிபன்பாக்ஸ் வெடிகுண்டை நவீன்குமாரின் காரின் முன்பக்க கண்ணாடி மீது வீசி உள்ளனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த நவீன்குமார், காரில் இருந்து இறங்கி தப்பிக்க முயன்றுள்ளார். அவரை விரட்டிச் சென்ற வெள்ளையத்தேவன், தான் வைத்திருந்த வாளால் சரமாரி வெட்டினார். இதில் நவீன்குமாரின் வலது கை விரல் துண்டானது. உடலில் பல்வேறு இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டன. அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வரவே, வெள்ளையத்தேவன் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். டிபன்பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில், நவீன்குமார் கார் அருகே நின்றிருந்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் மீது குண்டு வெடித்து சிதறியதில், கழுத்தில் காயம் ஏற்பட்டது. அங்கு வந்தவர்கள் நவீன்குமார், கண்ணன் இருவரையும் உடனடியாக மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த நவீன்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கீழவளவு போலீசார் வெள்ளையத்தேவன், மைக்கேல் என்ற மகாலிங்கம், அசோக், அஜய், கார்த்தி, வசந்த், கண்ணன் மற்றும் பாலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெள்ளையத்தேவன், அசோக் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து வாள், டிபன்பாக்ஸ் குண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில், வெட்டப்பட்ட நவீன்குமார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும், வெள்ளையத்தேவன் தரப்பினரும் இதே தடை செய்யப்ப்பட்ட பொருட்களை விற்று வந்ததில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, கோயில் திருவிழாவில் இந்த மோதல் தீவிரமாகி கொலை முயற்சிகள் நடந்திருப்பதும் தெரிந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய 6 பேரையும் பிடிக்க எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து, தீவிரமாக தேடி வருகின்றனர். டிபன் பாக்சில் வெடிமருந்து நிரப்பி, வெடிக்கச் செய்திருப்பதால் கியூ பிரிவு போலீசாரும் தனி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.