மேலூர் : மேலூர் அருகே கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், கிராம மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டு பலவகை மீன்களை அள்ளிச்சென்றனர்.மதுரை மாவட்டம், மேலூர் அருகே மாங்குளப்பட்டியில் உள்ள பெரிய கண்மாயில், பாரம்பரிய மீன்பிடி திருவிழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக, சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் முதல்நாள் இரவிலேயே வந்திருந்து கண்மாய்க்கரையில் காத்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலை கிராம பெரியவர்கள் வெள்ளை வீசி மீன்களை பிடிக்க அனுமதி அளித்தவுடன், அவர்கள் அனைவரும் ஒரு சேர கண்மாய்குள் இறங்கினர்.
பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான கச்சா, ஊத்தா மற்றும் கூடை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.
அவர்களுக்கு எந்த குறையுமின்றி கட்லா, கெளுத்தி, ரோகு, ஜிலேபி, அயிரை உள்ளிட்ட நாட்டுவகை மீன்கள் அதிக அளவில கிடைத்தன. இதனால் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். இது போன்ற சமத்துவ மீன்பிடி திருவிழா நடத்தப்படுவதன் மூலம் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.